இலக்குவன் நெஞ்சழிந்து நிற்றல் 2425. | எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் - மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும் சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர, வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே. |
(இவ்வாறு இராமன் பரதனைக் காட்டிக் கூறிய அளவில்) இளவல் - இலக்குவன்; மல் ஓடுங்கிய புயத்தவனை - மற்றொழில் (இவன் தோளின் பெருமையால் உலகில்)இல்லாதொழிந்த ஆற்றல் மிக்க தோள் உடைய பரதனை; வைது எழும் - நிந்தனை செய்துகூறிய; சொல்லொடும் - சொற்களோடும்; சினத்தோடும் - அவற்றுக்குக் காரணமாகத் தன் மனத்துண்டாகிய கோபத்தோடும்; உணர்வு - தன் உணர்ச்சிகளும்; சோர்தர - தளர்ந்தொழிய; வில்லொடும் - (தன் கையிற்பிடித்த) வில்லோடும்; கண்ண நீர் - (சிறந்த பரதனைத் தவறாகக் கருதினோமே என்றகழிவிரக்கத்தால் ஏற்படும்) கண்ணீரும்; நிலத்து வீழ- பூமியில் விழவும்; எல்ஒடுங்கிய முகத்து - ஒளி குன்றிப் பொலிவழிந்த முகத்துடனே; நின்றனன் -நின்றான். மல் ஒடுங்கிய - உலகத்து மல்தொழில் வலிமை எல்லாம் தன்பால் வந்து தங்கி்விட்டது எனினும் அமையும். இனி விரதவொழுக்கத்தால் வலிமை குன்றிய தோள் எனல் ஈண்டுப் பொருந்தாமையும், அரசர்க்கு அங்ஙனம் கூறுவது மரபாகாமையும் உணர்க. பரதன் திறத்துத் தான் நினைந்தன அனைத்தும் பிழைபட்டமையானும், உத்தமனை அதமனாகக் கருதிய அதனால் எற்பட்ட மனச்சோர்வும் இலக்குவனை ‘எல் ஒடுங்கிய முகம்’ உடையவனாக ஆக்கியது. 51 |