2429. | அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை, உயாவுற, திருஉளம் உருக, புல்லினான் - நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் - தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே. |
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் - எல்லா நேர்மைகளுக்கும் ஒப்பற்றஇருப்பிடமாக உள்ள இராமன்; தயாமுதல் - அருள் தெய்வம்; அறத்தினைத் தழீஇயது என்ன - தருமதேவதையைத் தழுவிக்கொண்டாற் போல; அயா உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அழு கண் நீர் - அழுகின்ற கண்களிலிருந்து வரும் நீர்; மார்பிடை - மார்பிடத்தில்; அருவிஉயாவுற - அருவிபோலத் தழுவிப்பெருக; திரு உளம் உருக - உள்ளே அழகிய மனம்கரைந்துருக; புல்லினான் - (பரதனைத்) தழுவினான். கருணைக் கடவுள் - இராமன், அறக்கடவுள் - பரதன். இராமன் பரதனைத் தழுவியது கருணை அறத்தைத் தழுவியது போலாகும். அறம் செயற்பாடு - கருணை - பயன்பாடு. காரணமின்றிப் பிறவுயிர் படும் துன்பம் கண்டு பெருகி வரும் இரக்கம் தயாவாகும். இறைவனைத் ‘தயாமூல தன்மம்’ என்பர் அப்பர் திருநா. 6-20: 6) இங்கே தயாமுதல் எனப்பெற்றது. புறத்தேயும் அகத்தேயும் உருகியது கண்ணீராலும், திருவுளம் உருக அயாவுயிர்த்ததாலும் புலனாயிற்று. ‘ஏ’ காரம் - ஈற்றசை. 55 |