இராமன் தந்தை இறந்தமை கேட்டு அறிந்து கலங்குதல் 2430. | புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான்; பலவும் உன்னினான்; ‘அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை மல் உயர் தோளினான் வலியனோ?’ என்றான். |
புல்லினன் நின்று - தழுவி நின்று; அவன் புனைந்த வேடத்தை - அப்பரதன்அணிந்திருந்த மரவுரியாகிய தவவேடத்தை; பல் முறை - பலமுறை; நோக்கினான் - உற்றுப் பார்த்து; பலவும் உன்னினான் - பலபடியாகக் கருதி; ‘ஐய! -பரதனே; அல்லலின் அழுங்கினை - துன்பத்தால் மிகவும் சோர்ந்துள்ளாய்; ஆளுடை மல்உயர் தோளினான்- ஆளுதலுடைய மற்போரிற் சிறந்த தோள் உடையவனாகிய தயரதன்; வலியனோ? - திடமாக இருக்கின்றானா?; என்றான்- என்று வினாவினான். பன் முறை நோக்கல், பலவும் உன்னுதல் என்பது பரதனது வேடம், துக்கம், வந்துள்ள நேரம் இவைபற்றி இராமனுக்கு எழுந்த சிந்தனைகளாம். ‘வலியனோ’ என்பது ‘நலமாக உள்ளானா’ என்ற விசாரிப்பு. இப்பொருளில் இது வருதலை, “வலிய என்றவர் கூற மகிழ்ந்தனன்” (2104) என்பது கொண்டு அறிக. 56 |