2431.அரியவன் உரைசெய, பரதன், ‘ஐய! நின்
பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக்
கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு
உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்’ என்றான்.

     அரியவன் - அறிதற் கரியவனாய இராமன்; உரை செய - வினாவ;
பரதன்-; ‘ஐய! - இராமனே!; நின் பிரிவு என்னும்
பிணியினால்-
நின்னைப் பிரிந்த பிரிவு என்னும் நோயினாலும்; என்னைப் பெற்ற அக்
கரியவள்
-என்னை ஈன்றெடுத்த அந்தக் கொடியவளாய கைகேயியின்; 
வரம் எனும் காலனால் - வரம்என்கின்ற யமனாலும்; தனக்கு உரிய
மெய் நிறுவிப்போய்
- தனக்குரிய சத்தியத்தைஉலகில் நிலைநிறுத்திச்
சென்று;  உம்பரான்” - (இப்போது) தேவர் உலகத்தில் உள்ளான்;
என்றான் -

     இறப்பிற்குக் காரணம் வேண்டும்; அது இராமனைப் பிரிந்த பிரிவு
என்னும் நோய் ஆயிற்று. யமன் - கைகேயி பெற்ற வரம். தயரதன்
வாய்மையைக் காப்பாற்றி உயிர் துறந்தான் என்பதை இங்ஙனம் கூறினான்
பரதன்.                                                      57