இராமன் தயரதனை நினைத்துப் புலம்புதல்  

கொச்சகக் கலி

2434.‘நந்தா விளக்கு அனைய
     நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின்
     தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர்
     ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு
     ஆள் உளரே மற்று?’ என்றான்.

     ‘நந்தா விளக்கு அனைய நாயகனே!’ - அணையாத விளக்கைப்
போல (இரவும் பகலும்புகழோடு விளங்கிய) தலைவனே!; நானிலத்தோர்-
இம் மண்ணுலகில் உள்ளார்க்கு;  தந்தாய்! - தந்தையொப்பவனே!;  தனி
அறத்தின்
- ஒப்பற்ற அறம் என்னும்குழந்தைக்கு; தாயே! - (பெற்று
வளர்த்த) தாயே!; தயா நிலையே! - பேரருளுக்குஇருப்பிடம் ஆனவனே!;
எந்தாய் - என் தந்தையே!; இகல் வேந்தர் ஏறே! -பகையரசர்களாகிய
யானைகளுக்குச் சிங்கம் போன்றவனே!;  இறந்தனையே - இறந்து போய்
விட்டாயே; இனி வாய்மைக்கு மற்று யார் உளர்? - இனிமேல்
சத்தியத்தைக் காப்பதற்குவேறு யார் இருக்கின்றார்கள்; அந்தோ’ - ஐயோ;’
என்றான்-.

     நந்தா விளக்கு - தூண்டா விளக்கு. பிறர் தூண்ட வேண்டாது எரியும்
விளக்குப் போல, தன்னால் தானே புகழுடையனாய் விளங்கியவன் தயரதன்.
நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் - உலகம் இப்பகுதிக்குள்
அடங்குதலின் நானிலம் எனவே உலகம் என்றாம். ஏகாரங்கள் இரக்கப்
பொருளில் வந்துள்ளன.                                        60