2439. | ‘தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக் கான் அடைந்தேன் என்னத் தரியாது, காவல! நீ வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன் நான், வாழ்வு உகந்தே!- ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்! |
‘காவல! - அரசனே!; ஊன் அடைந்த தெவ்வர் - உடற் கொழுப்பு மிக்க பகைவர்களது; உயிர் அடைந்த - உயிர்கள் தாமே வந்து புகலடைந்த; ஒள் வேலோய்!- ஒளி படைத்த வேலை உடையவனே!; (யான்) தேன் அடைந்த சோலைத் திருநாடு - தேன்பொருந்திய சோலைகள் மிகுந்த கோசல நாட்டை; கைவிட்டு - நீங்கி; கான்அடைந்தேன் என்ன - வனம் புகுந்தேன் என்று சொல்லக் கேட்டு; தரியாது -ஆற்றாமல்; நீ வான் அடைந்தாய் - நீ இறந்த விண்ணுலகம் புகுந்தாய்; நான்இன்னம் வாழ்வு உகந்து இருந்தேன் - நானோ இன்னமும் (உயிர்விடாது) வாழ ஆசைப்பட்டு இருக்கின்றேன். பகைவரிடத்திருந்தால் அவ்வப்போது நீங்கி ஓட வேண்டியிருத்தலின்; தயரதன் கை வேலை அடைந்தால் என்றும் நீங்காது நிலையாகப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதித் தெவ்வர் உயிர் அடைந்தது என்றது ஒரு நயம். பிரிந்த அளவிலே தாங்காது உயிர் விட்ட உனக்கும். நீ இறந்தும் உயிர் விடாத எனக்கும் அன்பில் உள்ள ஏற்றத்தாழ்வு எத்தகையது! அன்பிற் சிறந்த நீ அன்பு சிறிதும் அற்ற என்பால் அன்பு வைத்தாயே என்பதுபோலச் சொல்லி இரங்கினான் இராமன் என்க. ‘ஏ’ தேற்றம். 65 |