வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்

2443.மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்.

     மற்றும் - மேலும்; வரற்பாலர் எல்லாரும் - வரவேண்டியவர்கள்
எல்லாரும்;  வந்து  அடைந்து - வந்து சேர்ந்து;  சுற்றும் இருந்த
அமைதியினில்
- இராமனைச் சுற்றி இருந்த பொழுதில்; துன்பு உழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கி
- துன்பத்தில் அழுந்திய வெற்றி
நம்பியாகிய இராமனது முகத்தைப் பார்த்து; கோமலரோன் -
பெருமையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பெற்ற -
புதல்வன் ஆன; பெருமைத் தவ முனிவன் - பெருமையுடைய தவ
முனிவனாகிய வசிட்டம்; பேசுவான் -.

     பிரமனது நகத்திற் பிறந்தவன் வசிட்டன் என்னும் பாகவதம்.
‘வதிட்டன் தேற்றினான்’ என முன்னர்க் (2441.) கூறியது தொகை. இது விரி.
இனி விரிவாக வதிட்டன் தேற்றுதலைக் கூறுவார்.                    69