2445.‘ “உண்மை இல் பிறவிகள்,
     உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
     தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
     அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக்
     கருதல் ஆகுமோ?

     ‘(உயிர்களுக்கு), “உண்மை இல் பிறவிகள் - நிலையில்லாதனவாகிய
பிறப்புகள்; உலப்பு இல் கோடிகள் - அளவில்லாத கோடிக் கணக்கானவை;
(அவை) தண்மையில்வெம்மையில் தழுவின” - இன்பத்தாலும்
துன்பத்தாலும் உண்டாகப்பெற்றவை; எனும் -என்ற; வண்மையை -
வளமாக நூல்களில் கூறப்பெற்றவற்றை; நோக்கிய - நன்குபார்த்து
அறிந்தபின்பு; அரிய கூற்றின்பால் - கொடிய யமனிடத்தில்; கண்மையும்
உளது என
- கண்ணோட்டமும் இருக்கின்றது என்று; கருதல் ஆகுமோ -
நினைக்கக்கூடுமோ? (கூடாது)

     இன்ப துன்பங்கட்கேற்பப் பல பிறவிகள் எடுக்கும் உயிர்கல் அவை
தீர்ந்த பிறகு இறக்கின்றன. இதில் யமன் கண்ணோட்டம் உடையவனாதல்
வேண்டும் எனக் கருதல் எற்றுக்கு என்பதாம். கண்மையாவது கண்ணின்
தன்மை; அது கண்ணோட்டம். பிறர் துன்பம் கண்டு அவர்மாட்டுக் கண்
ஓடியவழிச் செய்யப்படுவது ஆதலின், கண்மை எனப்பெற்றது.         71