2449. | ‘புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம் திண்ணிய திரியினில், விதி என் தீயினில், எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால், அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? |
‘அண்ணலே! - தலைமை பொருந்தியவனே!; புண்ணிய நறுநெய்யில்- புண்ணியம்என்கின்ற நல்ல நெய்யில்; பொரு இல் - ஒப்பற்ற; காலம் ஆம் திண்ணியதிரியினில் - காலமாகிய வலிய திரியில்; விதி என் தீயினில் - விதிஎன்கின்ற நெருப்பினால்; எண்ணிய - கருத்தோடு ஏற்றப்பெற்ற; விளக்கு -உயிர் வாழ்க்கை என்கிற தீபம்; அவை இரண்டும் எஞ்சினால் - (நெய்யும் திரியுமாகிய)புண்ணியமும் விதியும் ஒழிந்தால்; அவிவதற்கு - அணைந்து போவதற்கு; ஐயம் -சந்தேகம்; யாவதோ? - ஏனோ? (இல்லை என்றபடி). நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை முடிந்துபோகும். காலத் திரி விதி நெருப்பில் கரைந்து எரிந்து போகும். புண்ணியம் அனுபவித்து வற்றும். உயிர் உடலைப் பிரியும்; இது இயற்கை நியதி என்றார். 75 |