தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் கூறுதல் 2452. | ‘ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை; உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ? செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின் கையினால் ஒழுக்குதி கடன் எலாம்’ என்றான். |
‘ஐய! - இராமனே; நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை - நீ சிறிதளவும்துன்பப்பட வேண்டா; அவற்கு - அத்தயரதனுக்கு; உய்திறம் - உய்தி பெரும்தன்மை; இதனின் ஊங்கு - இந்த விஷ்ணு லோகத்தை அடைவதைக் காட்டிலும்; இனிஉண்டோ?- இனிமேல் வேறு இருக்கிறதோ? (இல்லை) ஆதலின்; செய்வன -(தந்தைக்குச்) செய்யவேண்டுவனவாகிய அந்திமக் கிரியைகளை; வரன்முறை - நூல்களிற்சொல்லிய முறையானே; திருத்தி - ஒழுங்குறச் செய்து; சேந்த நின் கையினால்- சிவந்த நின் கைகளால்; கடன் எலாம் - நீர்க்கடன் எலாம்; ஒழுக்குதி - செலுத்துவாயாக;’ என்றான்-. இறந்தோரைக் கருதிச் செய்யும் கிரியைகளின் பலன், பித்ரு தேவதைகளைச் சார்கிறபடியால், உத்தமகதியை அடைந்தவர்களுக்கும் கிரியைகளும், நீர்க்கடன்களும் செய்ய வேண்டுதலின் அவற்றைச் செய்க என்றான் வசிட்டன். நீர்க்கடன் தருப்பணம். 78 |