2455. | புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன், தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான், முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் - ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். |
உயிர்தொரும் - எல்லா உயிர்களிடத்தும்; ஒக்க நின்று - ஒரு தன்மையாகஉள்ளிருந்து; உணர்வு நல்குவான் - அவற்றிற்கு உணரும் தன்மையை அருளுபவனாகிய(பரம்பொருள்) இராமன்; புனலிடை புக்கனன் - நதிநீரிற் புகுந்து; முழுகி -நீராடி; போந்தனன் - வெளியேறி; தக்க நல் மறையவன் - சிறந்த நல்லவேதங்களை உணர்ந்தவனாகிய வசிட்டன்; சடங்கு காட்ட - செய்ய வேண்டிய சிறந்தகிரியைகளை வழிப்படுத்த; தான்-; முக்கையின் நீர் - கையினால் மூன்றுமுறை முகந்து எடுத்துவிடும் தருப்பண நீரை; விதிமுறையின் - நூல்களில் விதித்த முறைப்படி; ஈந்தனன் - (தன் தந்தையை நினைத்து) கொடுத்தான். எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து உணர்வு தரும் பரம்பொருள், இராமன் என இப்போது மானுட வேடத்தில் வந்தான் ஆதலின் அதற்கேற்ப வேதவிதிப்படி சடங்குகள் காட்டத் தருப்பணம் செய்த தந்தையை வழிபட்டான் என்பதாம். 81 |