2456.ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின்,
மான மந்திரத்தவர், மன்னர், மா தவர்
ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்;
சானகி இருந்த அச் சாலை எய்தினான்.

     ஆனவன் - தருப்பணம் செய்தவனான இராமன்;  பிறஉளயாவும்
ஆற்றி
- வேறுபிண்டம் அளித்தல் முதலாக உள்ள சடங்குகளையும் செய்து
முடித்து; பின் - பிறகு; மான மந்திரத்தவர் - பெருமை  படைத்த
மந்திரிகளும்; மன்னர் - அரசரும்; மா தவர் - பெரிய முனிவர்களும்;
ஏனையர் பிறர்களும் - மற்றும் உள்ளவர்களும்; சுற்ற- தன்னைச் சுற்றிவர;
ஏகினன் - சென்று; சானகி இருந்த அச்சாலை- சீதா பிராட்டி இருந்த
அந்தக் குடிலை; எய்தினான் - அடைந்தான்.

     ‘பிற உள’ என்பது  நீர்க்கடன் செய்த பின்னர்அளிக்கப்படுவதாகிய
பிண்டம் முதலியவற்றைக் குறிக்கும். இராமன் தயரதனின் மூத்த மகனாதலின்
இறந்த முதல் நாள் தொட்டுப் பதின்மூன்றாம் நாள்வரை செய்யத் தகும்
கருமங்கள் அனைத்தும்செய்ய வேண்டியவனாவான் என்பதுபற்றி இவ்வாறு
கூறினார்.
மான - பெருமை “மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்”
என்று (1319) மந்திரப் படலத்துள் அமைச்சரைக் கூறியது காண்க. ஏனையர்
என்பது தன்னோடு தொடர்புடையாரையும், பிறர்களும் என்பது
தொடர்பில்லாதவர்களையும் குறித்ததாகக் கொள்க; பலரும் கற்ற என்பது
கருத்து. நீர்க்கடன் முதலிய செய்த பின்னரே சீதை இருந்த இடத்துக்குச்
செல்கின்றான் என்று கம்பர் கூறியது ஈண்டுக் கருதி உணரத்தக்கது.      82