இராமன் சீதைக்குத் தந்தை இறந்தமை கூறுதல்  

2459.அந் நெடுந் துயர் உறும் அரிய வீரனைத்
தன் நெடுந் தடக் கையால் இராமன் தாங்கினான்;
நல் நெடுங் கூந்தலை நோக்கி, ‘நாயகன்,
என் நெடும் பிரிவினால், துஞ்சினான்’ என்றான்.

     இராமன் -;  அந்  நெடுந் துயர் உறும் அரிய வீரனை -
அத்தகைய நீண்டபெருந்துயரமடைந்த சிறந்த பரதனை; தன் நெடுந் தடக்
கையால்
- தன் நீண்ட பெரியகைகளால்;  தாங்கினான் - எடுத்து
அணைத்து;  நல் நெடுங் கூந்தலை - நல்லநீண்ட கூந்தலை
உடையாளாகிய சீதையை;  நோக்கி - பார்த்து; ‘நாயகன், என் நெடும்
பிரிவினால்,  துஞ்சினான்’ என்றான்
- தயரதன் என் நீண்ட பிரிவைத்
தாங்க மாட்டாமல்இறந்துபட்டான் என்று தெரிவித்தான்.

     பரதனை இராமன் அணைத்துத் தேற்றினான். பதினான்கு ஆண்டுகள்
இராமன் வனம் உறைவானாதலின் அது ‘நெருட்பிரிவு’ எனப்பட்டது.
நெடுந்துயர், நெடுங்கை, நெடுங்கூந்தல், நெடும்பிரிவு என இச்செய்யுளில்
நெடுமை தொடர்ந்து வருவது ஒரு நயம். நன்னெடுங் கூந்தல் -
அன்மொழித்தொகை.                                           85