2461. | கல் நகு திரள புயக் கணவன் பின் செல, நல் நகர் ஒத்தது, நடந்த கானமும்; ‘மன்னவன் துஞ்சினன்’ என்ற மாற்றத்தால் அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ! |
கல் நகு - கல்லை இகழ்கிற; திரள் புயக் கணவன் - திரண்ட தோளை உடைய கணவனாகிய இராமன்; பின் செல - பின்னே செல்லுதலால்; நடந்த கானமும்- சீதை நடந்து சென்ற காடும்; நல் நகர் ஒத்தது - (அவளுக்குத் துயரைத் தராமல்) நல்ல அயோத்தி நகரைப் போலவே இருந்தது; (இப்போது) ‘மன்னவன் துஞ்சினன்’ என்ற மாற்றத்தால் - தயரதன் இறந்தான் என்ற வார்த்தையால்; அன்னமும் - சீதையும்; துயர்க்கடல் - துக்கம் என்ற கடலில்; அடி வைத்தாள் - கால் வைத்து நடக்கத்தொடங்கியவள் ஆனாள். இராமனுடன் சென்ற காரணத்தால் காடு புகுந்தும் துயரை அறியாமல் இருந்தவள், தயரதன் இறந்தான் என்று கேட்டபோது முதன்முதலில் துன்பம் என்பது இன்னதென அறிந்தாள் என்பதை இவ்வாறு கூறினார். ‘அரோ’ - அசை. 87 |