முனி பத்தினியர் சீதையை நீராட்டி இராமனிடம் சேர்தல் 2462. | ஆயவள்தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர், தாயரின், முனிவர்தம் தருமப் பன்னியர்; தூய நீர் ஆட்டினர்; துயரம் நீக்கினர்; நாயகற் சேர்த்தினர்; நவையுள் நீங்கினார். |
நவையுள் நீங்கினார் - குற்றங்களிலிருந்து நீங்கியவராகிய; முனிவர் தம்தருமப் பன்னியர் - முனிவர்களுடைய மனைவியர்; ஆயவள் தன்னை - துன்பக் கடலில்தோய்ந்த சீதையை; தாயரின் - தாய்மார்கள் போல; நேர்ந்து - அணுகி; அங்கை ஏந்தினர் - தமது அழகிய கைகளால் அவளைத் தாங்கி அழைத்துச் சென்று; தூய நீர்ஆட்டினர்- தூய்மையான கங்கை நீரிலே முழுக்காட்டி; துயரம் நீக்கினர் - அவள்துக்கத்தைத் தணித்து; நாயக் சேர்த்தினர் - கொழுநனான இராமனிடத்தில் அடைவித்தார்கள். தருமப் பன்னி - தருமபத்தினி - முனிவர்தம் மனைவியர். நாயகன் சேர்த்தித் துயரம் நீக்கினர் எனினும் அமையும். நாயகன் சேர்த்தி நவையுள் நீங்கினார் என நேரே கூட்டி, சீதையை இராமன்பால் சேர்ப்பித்துத் துன்பத்திலிருந்து நீங்கினார் என உரைத்து, தருமபத்தினயர் சீதை படும் துன்பம் பார்த்துத் தாம் படும் துன்பம் நீங்கியதாகப் பொருள்படுத்தலும் பொருந்தும் 88 |