தாயர், சானகியைத் தழுவிக்கொண்டு வருந்துதல்  

2466.பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும், சனகன் பூவையைத்
துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்;
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்.

     பின்னர் - பிறது;  வீரரைப் பெற்ற பெற்றி அப்பொன்
அனார்களும்
-இராமன் முதலிய நால்வரையும் பெற்ற தன்மையுடைய
அந்தப் பொன்போன்ற அரசமாதேவியர் மூவரும்; சனகன் பூவையை -
சனகன் மகளாகிய சானகியை; துன்னி - நெருங்கி; மார்புஉறத்தொடர்ந்து
புல்லினார்
- பற்றிக்கொண்டு மார்பிற் கட்டியணைத்து;  இன்னல் வேலை
புக்கு
- துன்பக் கடலிற் புகுந்து;  இழிந்து - உள்ளே இறங்கி;
அழுந்துவார்- அமிழ்பவராக ஆனார்கள்.

     சனகன் மகள் சானகி, பூவை - உவமவாகுபெயர். பொன் போன்றார் -
தேவியர்; போற்றிப் பாதுகாக்கப்படுபவர் என்னும் பொருளில், தழுவிய
அளவில் துயரம் மீக்கூர்ந்தபடியை இவ்வாறு உரைத்தார்.              92