சூரியன் மறைதல்  

2468.படம் செய் நாகணைப் பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்,
தடம் செய் தேரினான், தானும் நீரினால்
கடம் செய்வான் என, கடலில் மூழ்கினான்.

     படம் செய் நாகணைப் பள்ளி - ஆயிரம் படங்களை விரிக்கும்
தன்மையுள்ளஆதிசேடனாய படுக்கையை; நீங்கினான் - நீங்கி
அயோத்தியில் வந்து அவதாரம் செய்த(திருமால் ஆகிய) இராமன்; இடம்
செய்
- அவதரிப்பதற்கு இடமாகக் கொண்ட; தொல் குலத்து- பழமையான
சூரிய குலத்துக்கு; இறைவன் ஆதலால் - தான் முதல்வன்ஆனபடியால்;
தடம் செய் தேரினான் - பெரிய வழியில் செல்லும் பெருந்தேரையுடைய
சூரியன்; தானும் நீரினால் கடம் செய்வான் என - தானும் (தயரதன்
இறந்தமைக்கு)நீரினால் கடன் செய்பவனைப் போல; கடலில் மூழ்கினான்-
அத்தமனக் கடலில் முழுகிமறைந்தான்.

     தயரதன் சூரிய குலத்தவன் ஆதலால் தன் குலத்தவன் இறந்தமை
பற்றிச் சூரியன் தானும் நீரில் கடன் செய்ய முழுகுவதுபோல மறைந்தான்
என்று தற்குறிப்பேற்றமாகக் கூறினார். திருமால் நாகணைப் பள்ளி நீங்கி
அவதரிக்க இடம் தந்த குலம் சூரிய குலம் என உரைக்க. நாக அணை -
நாகணை; விகாரம் “நஞ்சுபதி கொண்ட வள நாகணையினான்” (சிந்தா. 287.)
காண்க. கடம் - கடன்- போலி.                                  94