2470. ‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்,
சரதன் நின்னதே; மகுடம் தாங்கலாய்,
விரத வேடம், நீ என்கொல் வேண்டுவான்?
பரத! கூறு’ எனாப் பரிந்து கூறினான்.

     ‘பரத!-; வரதன் துஞ்சினான் - மேலானவனாய தயரதன் இறந்தான்;
வையம்- நிலவுலகம்;ஆணையால் - (அவனது ) கட்டளையால்;சரதம் -
உண்மையாக;நின்னதே - நின்னுடையதே; (அவ்வாறிருக்க) நீ மகுடம்
தாங்கலாய்
- நீ மணிமுடிசூடாமல்; விரத வேடம் - தவ வேடத்தை;
வேண்டுவான் - விரும்பி அணிந்தது; என்கொல்? - எதனால்’; கூறு’ -
சொல்வாய்; எனா - என்று; பரிந்து - அன்பு கொண்டு; கூறினான் -
கேட்டு மொழிந்தான்.

     வரதன் - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுப்பவன் எனலும் ஆம்.
“ஈந்தே கடந்தான் இரப்போர்க் கடல்” (172.) என்றார் முன்னும்.
வேண்டுவான் எதிர்கால வினையெச்சம்; இங்குத் தொழிற்பெயர்த்
தன்மையாய் வந்தது. ‘வேண்டுதல் என் சொல்’ என உரைக்க.           96