2474.‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்,
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர்
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?

     ‘நிறையின் நீங்கிய - கற்பு நெறிவிலகிய;  மகளிர் நீர்மையும் -
பெண்களின் தன்மையும்; பொறையின் நீங்கிய தவமும் -
பொறுமையினின்று விலகிய தவவொழுக்கமும்; பொங்கு அருள் துறையின்
நீங்கிய
- விளங்குகின்ற கருணைவழியிலிருந்து விலகிய; அறமும் -
தருமமும்; தொல்லையோர் - முன்னோர்களது;முறையின் நீங்கிய -
முறைமையிலிருந்து  விலகிய;  அரசின் - அரசாட்சியைக்காட்டிலும்;
முந்துமோ - (கொடுமையில் முற்படுமோ? (முற்படாது  என்றபடி)

     அரசு முறைமையில் தவறுதல் மற்றவற்றைக் காட்டிலும் பெருங்கேடு
பயப்பதென்றான்;பிறவற்றையும் நெறிவழி நிற்கச் செய்வது அரசின்
பாற்பட்ட தாதலால். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் இல்வழி
இன்றாம்”மணி -22 -208- 9,) என்பதை ஈண்டுக்கருதுக.அறத்தின்
பயன்அருளே. அருளில்லான் அறம்செய்தல் என்பது நனைப்புக்கிடம்
தருவது. “அருளால் அறம் வளரும்” (அறநெறி. 142) என்பதையும்
காண்க.                                                     100