2476. | ‘தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால் வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான் பகைவனேகொலாம்? இறவு பார்க்கிறேன்! |
‘தொகை இல் அன்பினால் - (உன்னிடத்தில்) எண்ணமுடியாத அன்பினால் இறைவன்துஞ்ச - தயரதன் இறக்க; நீ புகைஇல் வெஞ்சுரம் புகுத - நீ புகையில்லாமல் எரியும்கொடுங்சுரத்தில் சேர்ந்திட; புந்தியால்- புத்தியினால்; வகை இல் வஞ்சனாய்- வகுத்தற்கு முடியாத வஞ்சனை உடையனாய்; அரசு வவ்வ - உன் அரசைக்கவாந்துகொள்வதற்கு; யான் இறவு பார்க்கின்றேன் - நான் சோர்கின்ற சமயம்பார்த்துக் காத்திருக்கிறவன் ஆகிறேன்; பகைவனே கொல் - பகைவனேயோ? தந்தையும் உரிமை மைந்தனும் இல்லாதபொழுது அரசைக் கைப்பற்றி தல் பகைவர் செயலேயாம். சோர்ந்த சமயம் பார்த்து இருந்து அரசு கைப்பற்றுவார் அவரே என்றான். இறவு பார்த்தல் - சோர்ச்சியறிதல். 102 |