2783. ‘தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ?
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனைதலோ? - ஐய! புதல்வர் ஆதல்தான்.

     ‘ஐய! - பரதனே; தனையர் ஆயினார் - மகனாகப் பிறந்தவர்கள்;
புதல்வர் ஆதல்தான் -புதல்வர் என்னும் சிறப்பினைப் பெறுவது; தந்தை
தாயரை
-தம் தந்தையை, தாயை; வினையின்- தாம்செய்யும் செயல்களால்;
நல்லது ஓர்இசையை வேய்தலோ- நல்லதாகிய ஒரு புகழை அடையும்படி
செய்தலாலா? (அல்லது); நினையல்ஓவிடா - என்றும் மனத்தை விட்டு
நீங்காத; நெடிய வன் வழி புனைதலோ - நீண்டகொடிய பழியை
அணிவிப்பதனாலா? எதனால்?

     புதல்வர் ஆதல் பெற்றோர்க்கு இசை வேய்தலால்தான் எனின்
பெற்றோர் சொல்வழி நின்று செயல் ஆற்றுதலே அதனை உண்டாக்கும்;
அவர் சொல்லுக்கு மாறுபடுவது அதனை உண்டாக்காது, பழியை ஆக்கும்
என்பதாம். ‘தான்’ உரையசை. பிறப்பால் தனையர் ஆயினும் செயல்சிறப்பால்
புதல்வர் ஆவர் என்பது கருத்து.                                 109