2484. | ‘இம்மை, பொய் உரைத்து, இவறி, எந்தையார் அம்மை வெம்மை சேர் நரகம் ஆள, யான், கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ் செம்மை சேர் நிலத்து அரசு செய்வேனோ? |
எந்தையர்- என் தந்தையார்; இவறி - அரசு ஆசைப்பட்டு; இம்மை- இப்பிறப்பிலே; பொய் உரைத்து - (கைகேயிக்கு வரம் கொடுத்ததை மறுத்துப்) பொய் சொல்லி; அம்மை - மறுமையில்; வெம்மைசேர்- கொடுமை பொருந்திய; நரகம் ஆள - நரகத்தை அனுபவிக்க; யான்-; கொம்மை- திரண்ட; வெம் முலைக் குவையின் வைகி - விரும்பப்படும் முலைக்குவட்டின்மேல்தங்கி; வாழ் - வாழ்ந்து; செம்மை சேர் நிலத்து - (இதுகாறும்) செம்மைபொருந்திய நாட்டின்கண்; அரசு செய்வேனோ - அரசு செய்துகொண்டிருப்பேனோ? (இரேன்). இவறுதல் - கைகேயிக்கு கொடுத்த வரத்தை நிறைவேற்றாது உலோபம் செய்தல். நான் அரசாள முற்பட்டால் எந்தையார் பொய்யுரைத்தாராய் நரகம் சேர்வர். தந்தையை நரகுக்கனுப்பித் தனையர் அரசாளுதல் தக்கதோ? புதல்வர் செய்யும் கடனோ? என்றான் இராமன். அரசாட்சியை இன்பம் அனுபவித்தல் என்னும் கருத்தில் “கொம்மை வெம்முலைக் குவையின் வைகி வாழ் அரசு” என்றான் என்க. 110 |