2485.‘வரன் நில் உந்தை சொல் மரவினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்க” என்னவே,-

     ‘வரன் - (கைகேயிக்குக் கொடுத்த) வரத்திலே; நில் - நிற்கின்ற;
உந்தை சொல் மரபினால் - உன் தந்தையாகிய தயரதன் சொன்ன சொல்
முறைப்படி; உடைத்தரணி - அவனுடையதான உலகம்; நின்னது என்ற
இயைந்த தன்மையால்
- பரதனாகியஉன்னுடையது என்று வந்து
பொருந்திய தன்மையாலும்;  நீ-; உரனின் - வலிமையோடு; பிறந்து -
(எனக்கு அடுத்த தம்பியாகப்) பிறந்து; உரிமை ஆதலால் - ஆட்சிஉரிமை
பெறுதலாலும்; அரசு - அரசாட்சி; நின்னது - நின்னுடையது; ஆள்க’ -
ஆள்வாயாக; என்ன - என்று இராமன் சொல்ல...

     இராமன், பரதன் ஆள வேண்டும் என்பதற்கு இங்கு இரண்டு
காரணங்கள் கூறினான் எனலாம். வரத்தால் பரதனுக்கு அரசு சேர்ந்தது
என்பது ஒன்று, வரத்தால் இராமன் காடு செல்ல அடுத்த தம்பியாகப்
பிறத்தலின் ஆட்சியுரிமை இயல்பாகவே அவனை வந்தடைகிறது என்பது
மற்றொன்று. ஆகவே, ‘அரசு நின்னதே ஆள்க’ என்றனன், இதனை மறுத்தல்
தந்தைக்கும் தாய்க்கும் மாறுபட்டு அறத்தின் வழுவுதலாகும் என்பதையும்
புலப்படுதினான். ‘ஏ’ காரம் தேற்றம்.                               111