பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல் 2488. | ‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு அசைந்த எந்தையார் அருள, அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ? |
‘பசைந்த சிந்தை நீ - (என்பால்) அன்புற்ற மனத்தை உடைய நீ; பரிவின்- (உன்) அன்பினால்; வையம் - உலகத்தை; என் வசம் செய்தால் -என்னுடையதாகச் செய்தால்; அது முறைமையோ? - அது நீதியாகுமோ?; வசைக்கு அசைந்த- பழிக்கு அஞ்சிய; எந்தை யார்- எம் தந்தையார்; அருள - (கைகேயிக்கு)வரம் அளித்தருள; அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் - அன்று அதற்குஉடன்பட்டுக் (காடு புகுவதாக) ஏற்றுக்கொண்ட பதினான்கு ஆண்டுகளும்; இன்றொடு ஏறுமோ? -இன்றோடு முடிந்துபோய்விடுமோ? ஏற்றுக்கொண்டதை யான் நிறைவேற்ற நீ உதவி செய்தல் வேண்டும் என்று பரதனிடம் தெரிவித்தான் இராமன். அப்படியில்லையேல் தந்தையார் மேல் பிழிவந்து சேரும். அவரே ‘வசைக்கு அசைந்த’ எந்தையார் - பழிக்கு அஞ்சுகிறவர் என்றும் குறிப்பித்தான். 114 |