2494.'ஆதிய அமைதியின் இறுதி, ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்கபின்,
நாதன் அவ் அகன் புனல் நல்கி, நண்ண அருஞ்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான்.

     ஆதிய - அதற்குமுனனான; அமைதியின் இறுதி - அக்கல்ப
காலத்தின் முடிவிலே; ஐம்பெரும் பூதமும் - நிலம், நீர், தீ, காற்று,
ஆகாயம் என்னும் ஐம் பூதங்களும்; வெளி ஒழித்து - வெளியாம் தன்மை
நீங்கி; எவையும் - எல்லாத் தத்துவங்களும்; புக்கபின் - இறைவனுக்குள்
ஒடுங்கியபிறகு; நாதன் - திருமால்; அவ் அகன் புனல் நல்கி - அந்தப்
பரந்த நீரினை உண்டாக்கி; (அதனிடையே) நண்ண அருஞ் சோதிஆம்
தன்மையின்
- பிறராற் கிட்டுதற்கரிய ஒளிவடிவாம் தன்மையோடு; துயிறல்
மேயினான்
- அறிதுயில் செய்யத் தொடங்கினான்.

     உலகம் அனைத்தும்அழிந்து போக ஊழிநீரில் திருமால் யோக
நித்திரை செய்வது இங்குக் குறப்பட்டது. சிருஷ்டியில் மேலிருந்து கீழ்
இறங்கும் தத்துவங்கள், ஒடுங்குகிளபோது கீழிருந்து மேலேறி ஒன்றொன்றாக
ஒடுங்கி நின்ற பிரகிருதியும் புருஷனும் பரமாத்மாவினிடத்தில் ஒடுங்கும்
ஆதலின், பூதத்தை ஒடுக்க முறையில் முதலில் சொல்லிப் பின்னர் எவையும்
புக்கபின் என்று பிறவற்றை அவற்றின்பின் ஒடுங்கியதாகக் குறிப்பிட்டார்.
ஆதிய அமைதியின் என்பதற்கு முன்பு உண்டான முறைப்படியே என்று
பொருள் உரைப்பாரும் உளர்.                                  120