2512.பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்;
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்;
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்;
கொண்டல்தன் ஆணையால் குகனும் போயினான்.

     பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் - பழமையான
வேதங்களை ஆராய்தறிந்தபரத்துவாச முனிவனும் (தன்னிடத்திற்குச்
சென்றான்; மண்டு நீர் நெடுநகர் மாந்தர்போயினார் - நிறைந்த அகழி
நீராற் சூழப்பெற்ற பெரிய அயோத்தி நகரவாசிகளாயமணிதர்களும்
புறப்பட்டுச் சென்றார்கள்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் -
வெளிப்பட்டு விண்ணிற் கூடிய தேவர்களும் அங்கிருந்து  நீங்கித் தத்தம்
இடம் சேர்ந்தார்கள்;கொண்டல்தன் - இராமபிரானது; ஆணையால் -
கட்டளையால்; குகனும்போயினான் - குகனும் தன் இடமாகிய சிருங்கி
பேரத்துக்குச் சென்றான்.

     குகன் சற்றுப் பின்தங்கி இராமனது ஆணை பெற்றுச்சென்றானாதல்
வேண்டும். விண்டு - வெளிப்பட்டு. மறைந்துள்ள தேவர்கள், தம்
காரியசித்திக்காக இராமனை அயோத்தி செல்லவொட்டாது தடுக்க
வெளிப்பட்டுக் கூடினார் ஆதலின்‘விண்டு உரை தேவர்’என்று கூறினார். 138