6550.

'தும்பி ஈட்டமும் இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு 

அமைந்தான்,

செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை 

வைத்தான்.

கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் 

கொடியான்.

 

தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும்- யானைக் கூட்டமும்,
தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை
- சேர்ந்த அழகிய பொன் போன்ற  அரிய  பெரிய படை; ஐயிரு
கோடி கொண்டமைந்தான்
- பத்துக் கோடி   பேரைக் கொண்டு
அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள சித்தரை  -  செம்பொன்
நாடாகிய     தேவ   உலகில்   வாழும் சித்தர்களை; சிறையிடை
வைத்தான்
- போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி
வெங்கதிரினும் கொடியான்
-   யுகாந்த   காலத்துச் சூரியனை
விடவும்    கொடியவன்;   கும்பன்    என்று உளன்- கும்பன்
என்பவனும் இருக்கிறான்.
 

தும்பி - யானை. செம்பொன் - சிவந்த பொன்.  பொன்  நாடு
- தேவர்கள்   உலகம். சித்தர்   என்பார் தேவர்களில் ஒருவகைப்
பிரிவினராவர். சித்தர்களைவென்று சிறையில்   வைத்தவன் கும்பன்.
'ஊழிவெங்கதிர்" ஊழிக் காலத்தின்   இறுதியில் உலகை அழிக்கத்
தோன்றும் வெப்பம் மிக்க   சூரியன்.   அந்தப் பரிதியை விடவும்
கொடியவன் கும்பன் என்பது கருத்து. 
 

(35)