பெண்ணுருஎன்றதனால் - இயற்கையிற் பெண்ணல்ல: பெண்ணுருக்கொண்ட ஆடவனான வீமன் எனக் காட்டியவாறு. அனுவாதத்தால் வீமசேனன் பெண்ணுருக்கொண்டிருந்தமையைத் தெரிவித்தார். இதுமுதல் இருபத்தொருகவிகள் - மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள். (118) 67.-ஆதரத்தாற் சிலகூறிக் கீசகன் பெண்ணுருவின்தாளிற்பணிந்து வேண்டுதல். என்பெருந்தவப்பயனென்றறிந்திலேன் மின்புரைமருங்குலாய்வேட்கைவிஞ்சலால் புன்பிழைசெய்தனன்பொறுத்திநீயென அன்புடன்சிலம்பணியடியில்வீழ்ந்துமேல். |
நான்கு கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) 'மின் புரை மருங்குலாய்-மின்னலையொத்த இடையை யுடையவளே! என் பெருந் தவம் பயன் என்று - என்னுடைய (முற்பிறவியிற் செய்த) பெருத்த நல்வினைப்பயனாகத் தோன்றியுள்ளாய் நீ என்பதை, அறிந்திலேன்-(முன்னர்) அறியாதவனாய்விட்டேன்: (அதனால்), வேட்கை விஞ்சலால்-காதல் விஞ்சியதனால், புல் பிழை செய்தனன் - (உன்திறத்திற்) சிறிய பிழையைச் செய்திட்டேன்: நீ பொறுத்தி-(யான் உன்திறத்துச் செய்த) சிறுபிழையைப் பொறுப்பாயாக,' என-என்று, அன்புடன்-காதலோடு, சிலம்பு அணி அடியில் - நூபுரமணிந்த பாதத்தில், வீழ்ந்து - விழுந்து பணிந்து, மேல் - பிறகு,-(எ - று.)-"எனா மொழிபல கூறினான்" என்று எழுபதாங்கவியில் தொடர்ந்து முடியும். கீசகன்செய்த பிழையை 21 - முதல் 29-வரையிலுள்ள செய்யுள்களிற் காண்க. (119) 68.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: பின்னும் காதல்விஞ்சக் கீசகன் பலமொழி கூறினமைதெரிவிக்கும். பைங்குலைக்குரும்பையைப்பழித்தகொங்கையாய் மங்குலைப்புழுகளைவைத்தகூந்தலாய் கங்குலிற்கால்வழிகாட்டவந்ததின்று இங்குலப்புறுமென தாவியீயவோ. |
(இ -ள்.) பைங் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் - பசுமையாய்க் குலைகுலையாகவுள்ள குரும்பையை ('இவை எமக்கு ஒப்பாகா' என்று) ஏளனஞ்செய்த கொங்கையையுடையாய்! மங்குலை புழுகு அளை வைத்த கூந்தலாய் - இரவைக் கஸ்தூரிப்புழுகெண்ணெய்கொண்டு தடவிவைத்தாற்போன்றுள்ள கூந்தலையுடையவளே! கங்குலில் - இந்தநள்ளிரவில், கால்வழி காட்ட - பாதமே (நடந்துசெல்லும்) வழியைக் காட்டாநிற்க, இன்று இங்கு வந்தது - |