(இ-ள்.) 'மன் மரபில் பிறந்து - க்ஷத்திரியசாதியிலே பிறந்து, இரு தோள் வலியால் இந்த மண் ஆளும் அவர்க்கு அன்றி - (தங்கள்) தோள்களிரண்டின் வலிமையினால் இந்தப்பூமியை ஆளுகிற அரசர்களுக்கே யல்லாமல், மறை நூல் வாணர் தொல் மரபில் பிறந்தவர் உம் இலக்கு வீழ்த்தால் - வேதங்களாகிய நூல்களுக்கு உரிமை பூண்டஅந்தணர்களுடைய தொன்றுதொட்டுவருகிற சாதியிலே தோன்றியவர்களும் குறித்த இலக்கைஎய்துவிழுத்தினால், (அவர்க்கும்,) இள தோகை -இளமையானமயில்போன்றசாயலுள்ள திரௌபதி, தொடையல் சூட்டும்ஓ - சுயம்வரமாலையைச் சூட்டுவளோ? என்ன - என்று (அருச்சுனன்) வினாவ,- தன்மரபுக்கு அணிதிலகம் ஆன வீரன் - தான்பிறந்த சோமககுலத்துக்கு அழகியதிலகம்போல மேன்மைவிளைப்பவனான வீரனாகிய திட்டத்துய்மன், 'மன்றலுக்கு தாழ்வுஓ - (அது) விவாகத்துக்குக் குறைவோ? தகவு அன்றுஓ- (அது) பெருமையன்றோ? என்றான் - என்று சொன்னான்; (உடனே அருச்சுனன்), வில் மரபில் சிறந்த நெடு வில்லை - வில்லின் இனங்களுட் சிறந்த நீண்ட அவ்வில்லை, ஈசன் மேருகிரி எடுத்தது என - சிவபிரான் மகாமேருமலையாகிய வில்லைஎடுத்ததுபோல, விரைவில் கொண்டான் - விரைவில் எடுத்தான்; (எ-று.) அந்தணன் இராசகன்னிகையை மணத்தல் அப்பெண்ணின் குலத்தார்க்குப் பெருமையாகுமே யன்றி இழிவாகா தென்று சொல்லித் திட்டத்துய்மன் அருச்சுனனதுகொள்கையைமகிழ்ச்சியோடு அங்கீகரித்தன னென்க. ஈசன் மேருகிரியெடுத்தது, திரிபுரசங்காரகாலத்தில். (530) 56.-அருச்சுனன் இலக்கைஎய்ய, முனிவரும் தேவரும் மகிழ்தல். கிளர்மகுடவயவேந்தர்நாண்களெல்லாங் கீழாகத்தனிநெடு நாண்கிளரவேற்றித், தளர்வறுசாயகந்தொடுத்துக்கற்றோர்யாருந்தனு நூலுக்காசிரியன்றானேயென்ன, உளர்திகிரிச்சுழலிலக்கையவையோர்தங்களுக்கமுடன் விழவெய்தா னுரவுத்தோளான், வளருமருந்தவவேள்விமுனிவரார்த்தார் வாசநறுமலர்சொரிந்து வானோரார்த்தகார். |
(இ-ள்.) உரவு தோளான் - வலிமையையுடைய தோள்களையுடையவனான அருச்சுனன்,- கிளர் மகுடம் வய வேந்தர்நாண்கள் எல்லாம் கீழ் ஆக தனி நெடு நாண் கிளர ஏற்றி - விளங்குகிற கிரீடத்தை யணிந்த வலிமையையுடைய அரசர்களின்நாண்களெல்லாம் கீழ்ப்பட்ட ஒப்பற்றநீண்டநாணியைமேலாம்படி உயரப்பூட்டி, தளர்வுஅறு சாயகம்தொடுத்து-தளர்ச்சியில்லாத(மிகவலிய) அம்பைத்தொடுத்து, கற்றோர்யார்உம் தனு நூலுக்கு ஆசிரியன் தான் ஏ என்ன - படித்தவர்களெல்லோரும் 'வில்வித்தைக்கு ஆசாரியன் இவனே' என்று (தன்னைக்குறித்துக்கூறிக்) கொண்டாடும்படி, உளர்திகிரி சுழல்இலக்கை அவையோர் தங்கள் ஊக்கமுடன் விழ எய்தான்-சுழலுகிறயந்திரசக்கரத்திற் பொருந்திச் சுழல்கிறஇலக்கை அச்சபையிலுள்ள அரசர்களுடைய உற்சாகத்தோடு கீழ்விழும்படி அடித்துத்தள்ளினான்; (அதுகண்டு), வளரும் அரு தவம் வேள்வி முனிவர் ஆர்த்தார் - (மேன்மேல்) வளர்கிற அரிய தவத்தையும். |