31.- இதுவும், அடுத்த கவியும் - அக்கினியின் பலநிறப் புகைகளின் வருணனை. ஆனவாகுலந்தன்னொடுதப்புதற் கணிபடப்பறந்தோங்குந் தூநிறத்தனகபோதமொத்தன விடையிடையெழுஞ்சுடர்த்தூமம் கானமேதியுங்கரடியுமேனமுங்கடகரிக்குலந்தாமும் வானிலேறுவபோன்றன நிரைநிரைவளர்தருகருந்தூமம். |
(இ-ள்.) இடை இடை எழும் - இடையிடையே மேலெழுகிற, சுடர் தூரம் - சிறிதுஒளியோடுகூடிய [வெள்ளிய] புகைகள்,- ஆன ஆகுலம்தன்னொடு - (தீப்பற்றியதனால் தமக்கு) உண்டான வருத்தத்துடனே, தப்புதற்கு - (அதனினின்று) தப்பிப்பிழைத்தற் பொருட்டு, அணிபட பறந்து ஓங்கும் - வரிசையாகப் பறந்துயர்ந்து மேலெழுகிற, தூ நிறத்தன கபோதம் - சுத்தமான நிறத்தையுடையனவாகிய புறாக்களை,ஒத்தன - போன்றன; நிரை நிரை வளர்தரு - வரிசைவரிசையாக மேலெழுகிற, கருந்தூமம் - கருநிறமான புகைகள்,- வானில் ஏறுவ - (சுற்றிலும் வளைந்துகொண்டஅந்நெருப்பினின்று தப்புதற்கு) மேலெழுவனவான, கானம் மேதிஉம் -காட்டெருமைகளையும், கரடிஉம் - கரடிகளையும், ஏனம்உம் - பன்றிகளையும், கடகரி குலம்உம் - மதயானைக்கூட்டங்களையும், போன்றன-; வெண்புகை கபோதத்தை யொத்திருக்க, கருந்தூமங்கள் வானிலேறுங் கானமேதிமுதலியனபோலுமென்றார்: தற்குறிப்பேற்றவணி. ஆகுலந்தன்னொடு என்பதில், 'ஒடு' - அடைமொழிப்பொருளது. 32. | வரைத்தடந்தொறுங்கதுவியகடுங்கனன்மண்டலினகல்வானில் நிரைதெழுந்தசெம்மரகதகனகவா ணீலவெண்ணிறத்தூமம் தரைத்தலத்தினின்றண்டகோளகையுறச் சதமகன்றடஞ்சாபம் உரைத்ததன்வளைவறநிமிர்ந்தழகுற வோடுகின்றதுபோலும். |
(இ-ள்.) வரை தடம் தொறுஉம் - மலைகளி னிடந்தோறும், கதுவிய கடுங்கனல் மண்டலின் - பற்றிய கொடிய அக்கினி நெருங்குதலினால், அகல் வானில்நிரைத்து எழுந்த - அகன்ற ஆகாயத்தில் வரிசையாக எழுந்த, செம் மரகதம் கனகம்வாள் நீலம் வெள் நிறம் தூமம் - செம்மை பசுமை பொன்மை கருமை வெண்மையென்னும் ஐவகை நிறங்களையுடைய புகையானது,- தட சதமகன் சாபம் - பெரியஇந்திரதனுசு. உரைத்த தன் வளைவு அற நிமிர்ந்து - (பிரசித்தமாகச்) சொல்லப்படுகிறதனது வளைவு நீங்க நிமிர்ந்து, தரைத்தலத்தினின்று அண்டகோளகை உற -பூமியினிடத்தினின்று அண்டகோளத்தின் மேன்முகட்டை யளாவ, அழகு உறஓடுகின்றது - அழகுமிக நீண்டுசெல்வதை, போலும் - ஒக்கும்; (எ-று.) மலைகளிலுள்ள பலவகைப்பொருள்களை நெருப்பு எரிக்கும் போது, அவ்வெரிக்கப்படும்பொருளுக்குஏற்பப் புகையின்நிறம் மாறுபடுதல், , இயல்பு. இங்ஙனம்பலவர்ணங்களையுங் கொண்டு விரவப்பெற்றதான இந்திரவில்லை உவமைகூறுவர், புகையின்நேரெழுச்சிக்கு ஒப்பாதற்பொருட்டு, 'வளைவற நிமிர்ந்து தரைத் தலத்தினின்றுஅண்டகோளகையுற ஓடுகின்றது போலும்' |