பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 174

இறைஞ்சினார்க்கு இருப்பளித்தலும் இறைஞ்சாது எதிர்ந்தாரை மார்புபிளத்தலும்
ஆகிய நன்மை தீமை இரண்டையும் வேலே செய்கின்றதெனக் கூறினும்
பொருந்தும்.  ஒருபொருட்பன்மொழியாகக்கொள்ளக்கூடிய தானம் வண்மை
என்ற இரண்டையும் ஒருங்கே கூறியதனால், தக்கவர்க்கு அளிப்பது
தானமெனவும், இன்னாரினையாரெனப் பாராது யாவர்க்கும் கொடுப்பது
வண்மையெனவும் சிறிது பொருள் வேறுபாடு காண்க.

     புகழ்பெற வேண்டுமென்ற விருப்பத்தினாற் கர்ணன் டம்பத்துக்காக
ஈகைத்தன்மையை மேற்கொண்டுள்ளானாதலால், அவனை 'புறஞ்சுவர் கோலஞ்
செய்வான்' என்றார்;  கர்ணன் உடம்பிற்குப் புகழைத்தருவதாகிய ஈகைக்
குணத்தை மேற்கொண்டு உயிர்க்கு உறுதியைத் தருகிற மனத்தூய்மை முதலிய
நற்குணங்களை மேற்கொள்ளாதிருப்பதற்கு, சுவரினுட்புறம் பழுது பட்டிருக்க
வெளிப்புறத்தைச் சித்திரிப்பது ஏற்ற உவமையாதல் காண்க:  இவ்வாறு
உபமானமுகத்தால் உபமேயத்தைப் பெறவைப்பது பிறிதுமொழிதலணியாம்;
இது ஒட்டணியெனவும்பெயர்பெறும்.  ஆழ்வார்களுடைய
அருளிச்செயல்களின் சொற்பொருட் கருத்துக்களைத் தமது நூலிற்
சிற்சிலவிடத்து எடுத்தாள்வது இவ்வாசிரியரது வழக்கமாதலால், 'மறஞ்சுவர்
மதிளெடுத்து மறுமைக்கே வறுமைபூண்டு, புறஞ்சுவ ரோட்டைமாடம் புரளும்
போதறிய மாட்டீர், அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க் காட்செய்யாதே,
புறஞ்சுவர் கோலஞ்செய்துபுட்கவ்வக் கிடக்கின்றீரே" என்ற
தொண்ரடிப்பொடியாழ்வாரது திருமாலைச் செய்யுளின் சொற்கருத்துக்களை
அடியொற்றி, 'புறஞ்சுவர் கோலஞ் செய்வான்' என்றார்.

     இருப்பு - இருத்தல்; 'பு' விகுதிபெற்ற தொழிற்பெயர்;  ஆகுபெயராய்,
இருக்கும் ஆசனத்தைக் குறித்தது.  புறஞ்சுவர் - சுவர்ப்புறம் என்பது
முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை; இலக்கணப்போலி.  சுவர்
கோலஞ்செய்வான்-"விகாரத்தியல்பு."  பூபதி - பூமிக்கு அரசன்.       (158)

6.-கர்ணன் வார்த்தை.

தாதவிழ் குவளை மாலைத்தருமன்மா மதலை பெற்ற
மேதகு வேள்விச் செல்வம்வேந்தரில் யாவர் பெற்றார்
ஏதள வவன்றன் வாழ்க்கையாரினி யெதிருண் டென்று
பாதக நினைவைத் தானும்பகர்ந்தனன் பரிவு கூர.

     (இ -ள்.) 'தாது அவிழ் - மகரந்தப்பொடிகளோடு மலரப்பெற்ற, குவளை
மாலை - குவளைமலர்மாலையைத் தரித்த, தருமன் மா மதலை -
தருமபுத்திரன், பெற்ற - அடைந்த, மேதகு வேள்வி செல்வம் - மேன்மையான
இயாசசூய யாகத்தைச் செய்து முடித்தலாகிய சிறப்பை, வேந்தரில் யாவர்
பெற்றார் - அரசர்களுள் எவர்தாம் பெற்றவர்? [எவரும் இல்லை யென்றபடி];
அவன் தன்