செய்ம்மின்-(திருதராஷ்டிரன்) உடன்பட்ட இதையே செய்யுங்கள்', என்றார் - என்று(பாண்டவர்க்குக்) கூறினார்கள்; (எ - று.) கீழ்ச்செய்யுளில் 'ஒருவருமறியாவண்ணம் ஒருதினமுறைதிர்' என்று கூறிய அஜ்ஞாத வாசத்தின்தன்மையை இச்செய்யுளில் துரோணன் விவரித்துக் கூறினான்; அஜ்ஞாதவாசத்திலே 'பிறர் இவர்கள்பாண்டவர்' என்று உங்களை அறிந்து விடுவாராயின், அப்பொழுது நீங்கள் மீண்டும் முன்போலவே பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டுமென நிபந்தனை கூறியவாறு. கீழ்த் துரியோதனன் தருமபுத்திரனை வென்ற போது இராச்சியத்தைவிட்டிட்டுக் காட்டுக்கேசென்றுவிடவேண்டுமென்று கூறியதனினும் பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு வருஷம் அஜ்ஞாதவாசமும்செய்தால் மீண்டும் இராச்சியத்தைப் பெறலாமென்ற இது, பாண்டவர்களின் நன்மையை உத்தேசித்துக் கூறியதாயிருத்தலால், 'சிறந்ததொன்றிதனினில்லை' எனப் பீஷ்மன் முதலியோர்கொண்டாடிக் கூறுவாராயின ரென்க. நாளின் உம்மை என்றும் பிரிக்கலாம். இசைந்ததேசெய்ம்மின் என்பதற்கு-'இசைந்ததே-(இது) பொருத்த முடையதே; செய்ம்மின் - (இவ்வாறேநீங்கள்) செய்யுங்கள்' என்றும், 'இசைந்து-(நீங்கள்) மனமொப்பி, அதே-(துரோணன் கூறிய) அதனையே, செய்ம்மின்' என்றும் பொருள் கூறலாம். (430) 278.-அடிமைத்தன்மையினின்றுநீங்குமாறு சூதாட வேண்டுமென்று திரௌபதி கூறுதல். சுரிகுழ லலைய நின்ற திரௌபதிசுருதி முந்நூல் வரபதி மொழிந்த மாற்றங்கேட்டலும் வணங்கி யைவர் அரசரு மெனது மைந்த ரைவரும்யானு மீண்டும் உரிமையின் றெய்த வெஞ்சூதாடுத லுறுதி யென்றாள். |
(இ -ள்.) சுரி குழல் அலைய நின்ற திரௌபதி - (நுனி) சுருண்ட கூந்தல் அவிழ்ந்தலைந்து கொண்டிருக்க(அங்கே) நின்ற திரௌபதி, - சுருதி முந்நூல் வரம் பதி மொழிந்த மாற்றம்கேட்டலும்-வேதத்திற்கு உரியவனும் பூணூலையணிந்தவனும் சிறந்த (அந்தண) குலத்தில் தோன்றியதலைவனுமான துரோணாசாரியன் கூறிய வார்த்தையைக் கேட்டவுடனே, வணங்கி-, 'ஐவர் அரசரும் - (எனதுகணவர்களாகிய) அரச குலத்துத் தோன்றிய பாண்டவரைவரும், எனது மைந்தர் ஐவரும் - எனதுபுதல்வர்கள் ஐந்து பேரும், யானும் - நானும், இன்று - இப்பொழுது, உரிமைஎய்த - (அடிமைநீங்கிச்) சுதந்திரத்தைப் பெறுமாறு, மீண்டும்-மறுபடியும், வெம்சூது ஆடுதல் - கொடிய சூதை யாடுவது,உறுதி - நன்மையைத் தரக்கூடியதாம்,' என்றாள் -; ( எ - று.) திருதராஷ்டிரன் சொற்படி இராச்சியத்தை மீளக் கொடுத்தற்கு இசையாத துரியோதனாதியர்,பாண்டவர்களை அடிமையினின்று நீக்குவதற்கும் உடன்படாதவரேயாவ ராதலாலும், |