வன்;வசு - செல்வம். புகுந்தது - தெளிவுபற்றிய காலவழுவமைதி;[நன்- பொது - 33.] (223) 48. | வரையுளானு மலரினுளானும்வெண் டிரையுளானுஞ் செகுப்பருமெம்முடன் தரையுளான்வந்து போர்பொரத்தக்கதோ உரையுளாரென் றுரையீருணரவே. |
(இ-ள்.) வரைஉளான்உம் - (கைலாச) கிரியிலுள்ள சிவனும், மலரின் உளான்உம் - தாமரைமலரிலுள்ள பிரமனும், வெள்திரை உளான்உம் - வெண்மையான பாற்கடலிலுள்ள திருமாலும், (என்னும் திரிமூர்த்திகளும்), செகுப்பு அரும் - (கூடிவந்து பொருதாலும்) அழித்தற்கு முடியாத, எம்முடன் - எங்களுடனே, தரை உளான் - பூமியிலுள்ளானொருமனிதன், வந்து போர் பொர தக்கதுஓ - வந்து போர்செய்யத் தகுமோ? [தகாதன்றோ];உரை உளார் என்று - (இங்ஙனம் அலட்சியமாகப் பேசும்) பேச்சுடையார்கள் என்று, உணர உரையீர் - (உம்வீரனுக்குத்) தெரியச் சொல்வீராக;(எ-று.) தூதனாகியசித்திரசேனனொருவனைநோக்கி 'உரையீர்'எனப் பன்மையாற் கூறியது, இகழ்ச்சிபற்றி:பால்வழுலமைதி;ஒருமைப் பாலிற் பன்மைப்பால் வந்தது: [நன்- பொது - 28.]உரைஉளார் - பேசுந்திறமுடைய தூதுவரே! என்று உணர உரையீர் - இவ்வாறு (அருச்சுனனுக்குத்) தெரியும்படி சொல்லுங்கள் எனவுமாம். வரை என்னும் கணுவின் பெயர் - சினையாகுபெயராய் மூங்கிலைக்குறித்து, அது பின் தானியாகுபெயராய் மூங்கில்விளையும்மலைக்குவருதலால், இருமடியாகுபெயர். அலரின் எனப் பிரித்தல். மோனைத்தொடைக்குக் பொருந்தாது. திரை யென்னும் அலையின்பெயர் - கடலுக்குச் சினையாகுபெயர்.இனி, வெண் திரை - வெண்மையாகிய அலைகளையுடையதெனஅன்மொழித்தொகையுமாம். பொர - தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு எழுவாயாயிற்று. நம்முடன் என்றும், தக்கனோஎன்றும், இன்றுரையீரென்றும் பாடம். (224) 49. | தனுசர்தானைதனைமதியாதொரு மனுசன்வந்து மலையமதிப்பதோ அனுசருங்கொலையாடலவுணரும் குனிசெயுஞ்சிலையென்றுகொதித்திட்டார். |
(இ-ள்) தனுசர்தானைதனைமதியாது - அசுரசேனைகளை ஒருபொருளாக எண்ணாமல்,ஒரு மனுசன் வந்து மலையமதிப்பதுஓ- மனிதனொருத்தன்வந்து (அதனோடு)போர் செய்ய எண்ணுவதோ? அனுசர்உம் - இளையோராகியஅசுரர்களும், கொலைஆடல் அவுணர்உம் - (பகையைச்) கொல்லுதற்றொழிலிற்பயிற்சியையுடைய (மூத்தோராகிய) அசுரர்களும், சிலை- (தங்கள் தங்கள்) வில்லை,குனி செயும்- வளைத்தலைச்செய்யுங்கள், என்று - என்று (தம் இனத்தாரை நோக்கிக்) கூறி, கொதித்திட்டார்-(அசுரர்கள்) கோபித்தார்கள்;(எ-று). |