பக்கம் எண் :

198பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)அந்தகன் - யமன், நம்மை-,பொரற்கு - போர் செய்து
எதிர்ப்பதற்கு, வல்லன் அல்லன் - சமர்த்தனல்லன்;அபயம் முன் தந்த -
(நம்மால்) முன்னே அபயங்கொடுக்கப்பட்ட, இந்திரன் தனக்குஉம் -
தேவேந்திரனுக்கும், அன்ன தன்மை - (நம்மோடு பொரமாட்டாத)
அத்தன்மை, ஒக்கும் - பொருந்தும்; (ஆதலால் இவன் யமனும்
இந்திரனுமல்லன்);கந்தன் என்னில் - முருகக்கடவுள் என்போமென்றால்,
ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை-(ஆறுமுகனாதற்குத்தக)
பன்னிரண்டு கண்களும் அத்தனை கைகளும் இல்லை: (ஆதலால்
அவனுமல்லன்) இன்று நம்மொடு எதிர்க்கும் இந்த வீரன் - இப்பொழுது
நம்முடனே எதிர்க்கிற இவ்வீரன், மேல் எந்த வீரன் - இம்மூவருமல்லாத
எந்த வீரனோ? (எ-று.)-என்றுஐயப்படுதலும் தெளிதலுமானார்கள்அவுண
ரென்க.

     அபயந்தருதல் -பயப்படாதேயென்று வாக்குதத்தஞ் செய்தல். 
மேல்-வேறென்னும் பொருள்பட நின்ற இடைச்சொல்.           (294)

119.-அவ்வசுரர்களின்வனப்பைக்கண்டு அருச்சுனன்
கருத்துநொந்துகூறலுறுதல்.

எண்டயங்குமெயிறுவெண்ணி லாவெறிப்பவெயின்மணிக்
குண்டலங்களழகெறிப்ப மகுடகோடிகுலவிமேல்
மண்டியெங்கும்வெயிலெறிப்ப வஞ்சர்தம்வனப்பெலாம்
கண்டுகண்டருச்சுனன்க ருத்துநொந்துகூறுவான்.

     (இ-ள்.) எண்தயங்கும் எயிறு - வலிமைமிக்க பற்கள், வெள் நிலா
எறிப்ப - வெண்மையான சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசவும், வெயில்
மணி குண்டலங்கள் - சூரியகாந்தியை யொத்து விளங்குகின்ற இரத்தின
குண்டலங்கள், அழகு எறிப்ப - அழகை வீசவும், மகுடம் கோடி -
கிரீடத்தின் நுனி, குலவி - விளங்கி, மேல் மண்டி - மேலே பொருந்தி,
எங்கும்-, வெயில் எறிப்ப - சூரியனொளிபோன்றஒளியை வீசவும், வஞ்சர்
தம் வனப்பு எலாம் - வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களின் இவ்வழகுகளை
யெல்லாம், கண்டுகண்டு - நன்றாகப்பார்த்து, அருச்சுனன்-,கருத்து
நொந்து - மனம் வருந்தி, கூறுவான் - (சில வார்த்தை) சொல்வானானான்;
(எ-று.),-கண்டுகண்டு- அடுக்கு, மிகுதிப்பொருளது.             (295)

120.-அருச்சுனன் அவ்வசுரரின்வனப்பைக்
கண்டு இவர்களைக்கொல்லவேணுமேயென்று நொந்து
கூறுதல்.

கன்னல்வேளைவென்றவிக்கவின்படைத்தகாட்சியும்
மின்னுபூண்விளங்குமார்பும் விபுதருக்குமில்லையால்
என்னபாவமிவரையாவி யீடழிப்பதென்றுபோர்
மன்னர்மன்னன்முன்னுரைத்த வாய்மையுங்குறிப்புறா.