பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்றும் எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்கொன்று வரும்படி ஏவ, சிவபெருமான் தம்மேற் சீறிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும், பூதங்களைத் தமது கணங்களாகவுங்கொண்டு, மானைக் கையில் ஏந்தி, புலியைத் தோலைஉரித்து உடுத்து, முயலகனை முதுகிற் காலால்ஊன்றி, வெண்டலையைக் கையிற்பற்றிச் சடைமேலணிந்து, அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பது, கட்செவி கச்சுசாத்தின கதை. கைம்மலையுரிவை சாத்தின கதை:-அருந்தவமியற்றிப் பெருவரம் பெற்ற கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாமல் வருத்தித் துரத்த, அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற் பரமசிவன் தம்மை எதிர்த்துப் போர்செய்ய வந்த அவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக்கொன்று, தோலை உரித்துப் போர்த்தருளினதென்றாயினும்; தாருகவன முனிவரேவிய யானையின் உட்சென்று உருத்திரமூர்த்தி உடல் பிளந்து அதன் உரிவையைப் போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க.(34) 35.-அந்தக்கைலையின் சிறப்பு. எயிலுறுமூன்றுஞ்செற்றோ னேந்திழையுடனேவைகும் கயிலையின்பெருமைதன்னைக் கட்டுரைசெய்வதெங்ஙன் வெயிலவன்முதலோர்நாளு மேம்படவலஞ்செய்வார்கள் அயிலுநல்லமுதோர்சூழ்வந் தன்புடன்போற்றுவாரே. |
(இ-ள்.) எயில் ஒரு மூன்றுஉம் செற்றோன் - ஒப்பற்ற திரிபுரத்தை நாசஞ்செய்த பரமசிவன், ஏந்துஇழை உடனே-தரித்த ஆபரணங்களையுடைய உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற, கயிலையின் - ஸ்ரீகைலாசகிரியினது, பெருமைதன்னை-மகிமையை, கட்டுரை செய்வது- வரையறுத்துச் சொல்வது, எங்ஙன்-எவ்வாறு?(முடியாதென்றபடி); வெயிலவன் முதலோர்-சூரியன் முதலியோர்கள், நாள்உம்-தினந்தோறும், மேம்பட-(தாம்) மேன்மைப்படும்பொருட்டு, வலஞ்செய்வார்கள்- (அம்மலையைப்) பிரதட்சிணம்பண்ணிவருவார்கள்; அயிலும் நல் அமுதோர்- உண்கின்ற நல்ல (இனிய) அமிருதத்தையுடைய தேவர்கள், சூழ் வந்து- பிரதக்ஷிணம் பண்ணிவந்து, அன்புடன்-பக்தியுடனே, போற்றுவார்- துதிப்பார்கள்; (எ-று.) பின்னிரண்டிகள்-கயிலைமலையின் மகிமையைச் சொல்லமுடியாது என்று முன்னிரண்டடியிற் கூறிய பொருளைச் சமர்த்திக்க வந்தன: ஆதலால், இச்செய்யுள்-தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம். வெயிலவன்- வெயிலையுடையவன்: வெயில்-உஷ்ணகிரணம். அயிலு நல்லமுதோர்- நல்லமுது அயில்வோர். எயில்-எயிலையுடைய புரத்துக்கு ஆகுபெயர். எயில் மூன்று செற்ற கதை:-தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்க |