(இ - ள்.) தன் தன் - தன்னுடைய, இச்சையின் அன்றி - இச்சையின்படியல்லாமல், ஏழ் கடல் உடை தராதலந்தனைஆளும் - ஏழுகடலையும்ஆடையாகக்கொண்ட பூமியை அரசுபுரிகின்ற, மன் தன் - துரியோதன வரசனுடைய, இச்சையின் - விருப்பின்படியே, புரியும் - செய்கின்ற, அ வேள்வியின் - அவ்யாககுண்டத்தினின்று, உறு பெரும் பூதம் - மிக்க பெருந்தோற்றமுடைய பூதமொன்று,-வந்து - தோன்றி, எயிறு- கோரப்பற்களினின்று, சென்று - வெளிப்போய், இள நிலவு எழ - இளநிலா வீசவும், துணைவிழி - இரண்டு கண்களினின்று, தீ எழ - நெருப்புப்பொறி பறக்கவும், வெயில் வாய் கார் குன்று என - வெயில்பொருந்திய கருநிறமலைபோல,பொலிந்து - விளங்கி, எழுந்தது - வெளிப்பட்டது: முனிவன்உம் - (அபிசாரயாகஞ்செய்து பூதத்தையுண்டாக்கிய) காளமாமுனியும், கூசி - அஞ்சி, மெய் குலைந்திட்டான்- உடல் நடுங்கினான்;(எ - று.) வேள்வி -இங்கே குண்டத்துக்கு ஆகுபெயர். கருநிறமுடைய பூதத்தினிடத்துத் தீப்புறப்படும் விழிக ளிருத்தலால், அதற்கு, 'வெயில்வாய் கார்க்குன்று'என்று உவமைகூறினார். பூமியாகிய பெண்ணுக்குக் கடலை ஆடையாகக் கூறுவர். (669) வேறு. 16.-துரியோதனன்அபிசாரவேள்வி செய்விப்பதை யறிந்து, யமராஜன்பாண்டவர்களைஆபத்தினின்று தப்பச் செய்விப்பவனாதல். இப்பாலிவ்வா றோமஞ்செய்திவனிப் பூத மினிதெழுப்ப அப்பாலிருந்த வனசரித ரைவர்க் கமைந்த வாறுரைப்பாம் முப்பாலினுக்கு முதற்பாலாய் மும்மைப் புவனங்களுங்காக்கும் தப்பாவாய்மை யறக்கடவு ளறிந்தா னெண்ணத்தப்புவிப்பான். |
(இ-ள்.) இபால்-(துரியோதனனுள்ள)இவ்விடத்தில், இவன்-இக் காளமாமுனிவன், இ ஆறு-இப்படி, ஓமம் செய்து-யாகத்தைச் செய்து, இ பூதம்-இப்படிப்பட்ட பூதத்தை, இனிதுஎழுப்ப-இனிதாக (யாககுண்டத்தினின்றும்) எழுமாறுசெய்ய,-அ பால்-அங்கு[வனத்தில்],இருந்த - வசித்திருந்த, வனசரிதர் ஐவர்க்கு-காட்டில் திரிபவராகிய பஞ்சபாண்டவர்க்கு, அமைந்த ஆறு - நேர்ந்தநிலைமையைப்பற்றி, உரைப்பாம்-(இனிச்)சொல்லுவோம்:முபாலினுக்கு-(அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்று பகுதிக்குள், முதல் பால் ஆய்- முதற்பகுதியான தருமசொரூபியாய், மும்மை புவனங்கள்உம் காக்கும் - (மேல் கீழ் நடு என்னும்) மூன்றிடங்களிலுமுள்ள உலகங்களையும் பாதுகாக்கின்ற, தப்பா வாய்மை - தவறாதசத்தியத்தையுடைய, அறக்கடவுள்-தருமராஜன் எனப்படுகிற யமன், அறிந்தான்- (துரியோதனனுடைய சூழ்ச்சியை) அறிந்தவனாய்,எண்ணம் தப்புவிப்பான் - (அந்தத்துரியோதனனுடைய) எண்ணத்தினின்றும் பாண்டவர்களைத்தப்பச் செய்விப்பானானான்;(எ - று.)-பாண்டவர் |