105. | கொண்டுதவமேதனமெனப்புரியும்வில்லிமெய்குலைந்தய ருகின்றநிலையைக், கண்டருகுநின்றவிமவான்மகளுரைக்கமிகுகருணை யொடிரங்கியவனைப், பண்டுதவமேபுரியிளைப்பற மனத்தின்மிகுபரி வுடையனாகிவெகுளா, எண்டிசையும்வென்றனலளித்தசிலை நாணியற வெயினர்பதியெய்தனனரோ. |
(இ-ள்.)தவம்ஏ-தவத்தையே, தனம் என-செல்வமென்று, கொண்டு- மேற்கொண்டு, புரியும்-செய்கின்ற, வில்லி - விற்போரில் வல்ல அருச்சுனன், மெய் குலைந்து - (இவ்வாறு)உடம்புநடுங்கி, அயருகின்ற - தளர்கின்ற, நிலையை-தன்மையை, கண்டு-பார்த்து, அருகு நின்ற இமவான் மகள் உரைக்க - (தனது)பக்கத்திலே நின்ற இமயகிரியினது குமாரியாகிய பார்வதி சொல்ல, எயினர் பதி-வேடர்தலைவன், மிகு கருணையொடு - மிகுந்த அருளுடனே, அவனை-அவ்வருச்சுனன்திறத்தில், இரங்கி- திருவுள்ளங்கனிந்து,-பண்டு தவம்ஏ புரி இளைப்பு அற (இப்போருக்கு) முன்னே தவத்தைச் செய்ததனாலுண்டாகிய (அவனது)இளைப்பு நீங்கும்படி, மனத்தில் மிகு பரிவு உடையன் ஆகி-(தனது)உள்ளத்தில் மிகுந்த அன்புடையவனாய், வெகுளா - (வெளிக்குக்)கோபித்து, எண்திசைஉம் வென்று-எட்டுத்திக்குக்களிலுள்ளாரையும் ஜயிக்கும்படி, அனல் அளித்த- அக்கினிதேவனாற் கொடுக்கப்பட்ட, சிலை-(காண்டீவமென்னும்)வில்லினது, நாணி-நாண், அற - அறும்படி, எய்தனன்-அம்பெய்தான்;(எ-று.) தவஞ்செய்யும் முனிவர்க்கு 'தபோதனர்'என்று பெயரிருத்தலால் 'தவமேதனமெனப்புரியும்வில்லி'என்றார். அரோ-ஈற்றசை. வென்று- எச்சத்திரிபு. (105) 106.-அருச்சுனன்விற்கழுந்தினாற் சிவபிரானது சிரசில் மோத, அப்பிரான் அவசமாதல். உழுந்துருளுமெல்லைதனில்வில்லினெடுநாணற வுரத்தொடெதி ரோடிவடிவிற், கழுந்துகொடுமாமுடியின்மோதுமு னிழந்ததுயர் கண்ணிபடுபீலிமதியின், கொழுந்தமுதுசோரவிடநாகர் சுடிகைத்தலைகுலைந்து மணிசிந்தநதியாள், எழுந்துதடுமாறியகல்வானிலுறவேடனுமிளைத்தவசமுற்றனனரோ. |
(இ-ள்.)உழுந்து உருளும் எல்லை தனில் - ஒரு உழுந்து என்கிற சிறு தானியம் ஒருமுறை உருளுங்காலத்தினளவில் [மிகவிரைவில் என்றவாறு], வில்லின் நெடு நாண் - (தனது)வில்லினது நீண்ட நாணி, அற - (சிவவேடனதுஅம்பினால்)அற்றுப் போக, - (அருச்சுனன்),உரத்தொடு - வலிமையுடனே, எதிர் - அவ்வேடனெதிரே, ஓடி - விரைந்துசென்று, வரி வில் கழுந்துகொடு - கட்டமைந்த (தனது)வில்லினது தண்டத்தால், மா முடியில் - (அவ்வேடனது)சிறந்த சிரசிலே, மோதும்முன் - தாக்குதற்கு முன்னே, உயர் கண்ணி படு பீலி - சிறந்த தலையின்மாலையாகப் பொருந்திய மயிலிறகு, இழந்தது - (முடியைவிட்டு)நீங்கினதாக |