வாளியை-உனது திருநாமத்தைப்பெற்ற தெய்வத் தன்மையையுடைய பாசுபதாஸ்திரத்தை, தந்தருள் - கொடுத்தருளுவாயாக,'என்றனன்-என்று கேட்டுக்கொண்டான்;(எ-று.) பாரதஅமர் என்பதற்கு-பரதவமிசத்தாருள் நிகழும் போர் என்று பொருள்:பார் அதம் அமர் என்றுபிரித்து-பூமியிலுள்ள துஷ்டரை நாசப்படுத்தும் போர் என்று உரைப்பாருமுளர். சிந்த=சிந்துவிக்க: பிறவினைப் பொருளில் வந்த தன்வினை: சிதற என்று தன்வினையே யாகவுமாம். (128)129. சிவபெருமான்அருச்சுனனுக்குப் பாசுபதத்தையீதல்.ஐயனுமம்மையோ டருள்புரிந்துபின் வெய்யபொற்றூணியும் வில்லுமந்த்ரமும் துய்யபாசுபதமெய்த் தொடையுமுட்டியும் ஒய்யெனநிலையுடனுதவினானரோ. |
(இ-ள்.)ஐயன்உம்-தலைவனானசிவபிரானும், அம்மையோடு- பார்வதியுடனே, அருள் புரிந்து-கருணைசெய்து, பின்-உடனே, வெய்ய பொன் தூணிஉம்-(பகைவர்களுக்குப்)பயங்கரமானபொன்னாலாகிய அம்புப்புட்டிலையும்,வில்உம்-வில்லையும்,மந்த்ரம்உம்-உரிய மந்திரத்தையும், துய்ய பாசுபதம் மெய் தொடைஉம்-பரிசுத்தமான பாசுபதம் என்கிற உண்மையான அஸ்திரத்தையும், முட்டிஉம்-அவ்வில்லையும் அம்பையும் பிடிக்கும் விதத்தையும், நிலையுடன்-நிலையுடனே,ஒய்யென- விரைவாக, உதவினான்-தந்தருளினார்; வில் வளைத்துஅம்பைஎய்வார் நிற்றற்கு உரியநிலை-ஆலீடம், பிரதியாலீடம், பைசாசம், மண்டலம் என நால்வகைப்படும்:அவற்றுள் வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல், ஆலீட நிலை: வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல், பிரதியாலீட நிலை:ஒருகாலில்நின்று ஒருகால் முடக்கல், பைசாச நிலை;இருகாலும் பக்கல் வளைய மண்டலித்தல், மண்டலநிலை: இனி, வேறுவகையாகக் கூறுவாரு முளர். தூணியையும் வில்லையும்தொடையையும் உதவுதல்-தருதல்: மந்திரத்தையும் முட்டியையும் நிலையையும்உதவுதல்-உபதேசித்தல். இனி, முட்டி என்பதற்கு-கைக்கவசம் என்றும், நிலையென்பதற்கு- உடற்கவசமென்றும் பொருளுரைப்பாரு முளர். மெய்த்தொடை - பழுதுபடாமற் குறித்த இலக்கிற் சென்று தாக்கும் அம்பு என்றவாறு. (129) 130. சிவபெருமான்கயிலைக்கு ஏகுதல். பெற்றனன் விசயனும் பேயும்பூதமும் சுற்றியகணங்களுஞ் சுருதியோசையும் வெற்றிகொள்பெற்றமும் விழைந்துசூழவே கற்றையஞ்சடையவன் கயிலையேகினான். |
|