புத்திரனாகிய வீமசேனனும்,-சில் நாள் சென்ற பின் - (தருமபுத்திரன் விராடனையடைந்து) சிலநாள் கழிந்தபிறகு, தெள் அமுது அனைய உண்டியை குறித்து கற்ற - தெள்ளிய அமிருதம் போன்று இனிய உணவைச்சமைத்தலைக் குறித்து(த் தான்) கற்றுள்ள, தன் கல்வி உரிமையை குறித்து - தன்னுடைய பாகசாஸ்திரத்திலேயுள்ள வல்லமையைச் சொல்லிக்கொண்டு, 'மண்டலத்து அரசே - பூமண்டலத்துக்குத் தலைவனே! அடு தொழிற்கு - சமைக்குந்தொழிலில், ஒருவன் யான் - ஒப்பற்ற திறமைபடைத்தவன் நான்: வீமன் மடையன்-,' என்று - என்று சொல்லிக்கொண்டு, அரசுஅவை - ராஜசபையை, வந்தான் - வந்துசேர்ந்தான்; (எ - று.) தண்டாயுதப்போர் முதலியவற்றில் ஒப்பற்ற வீமன் 'பாக[சமையல்] சாஸ்திரத்தில் தான் நிகரற்றவன்: வீமன்மடையன்' என்று தன்னைத் தெரிவித்தான் என்க. வீமன்மடையன் என்ற தொடர் - வீமனுடைய மடையனென்று பொருள் படுதலோடு வீமனாகிய மடைய னென்றும் பொருள்படுவது காண்க. (14) 15.-சேர்ந்த வீமன்தன்திறமையை விளங்கக் கூறுதல். வந்துதன்றம்முன்மலரடிமுன்னிமலர்க்கையான்முடியின்மேல்வணங்கி ஐந்துபல்வகையிற்கறிகளும்வெவ்வேறறுசுவைமாறுமாறமைப்பேன் வெந்திறன்மல்லும்புரிதொழிலுடையேன்விருதுடைப்பலாயனனென்பேர் இந்திரனுலகுதன்னிலுமெண்ணிலென்றொழிற்கெதிரிலையென்றான். |
(இ - ள்.) வந்து-, தன் தம்முன் - தனது தமையனுடைய, மலர் அடி - தாமரைமலர் போன்ற திருவடிகளை, முன்னி - தியானித்தபடியே, மலர் கையால் - தாமரைமலர்போன்ற கைகளினால், முடியின் மேல்வணங்கி - சிரசின்மீது வைத்து வணங்கி [சிரசின்மேல் இருகையும் வைத்துக் குவித்து வணங்கி], 'பல் கறிகள்உம் - பலவகைப்பட்ட கறிகளையும், ஐந்து வகையின் - ஐந்துவகைக்குள், வெவ்வேறு அறுசுவை மாறும்ஆறு - ஆறுசுவைகளும் வெவ்வேறாக மாறிமாறி வரும்படி, அமைப்பேன்-; வெந் திறல் - கொடியதிறமையோடு, மல்உம் - மற்போரும், புரி - செய்கின்ற, தொழில்- தொழிலை, உடையேன் -; விருதுஉடை - புகழ்பெற்ற, பலாயனன் என் பேர் - பலாயனனென்பது என்னுடைய பேராகும்: எண்ணில் - ஆலோசிக்குமிடத்து, இந்திரன் உலகு தன்னில்உம் - இந்திரலோகத்திலும், என் தொழிற்கு - என் தொழிலைச் செய்வதற்கு, எதிர் - ஒப்பானவர், இலை-,' என்றான்-; (எ - று.) ஐந்து வகையாகக் கறிகளையமைத்தல் - உண்பன கடித்துத்தின்பன பருகுவன மெல்லுவன நக்குவன ஆகப் பக்குவஞ்செய்தல். அறுசுவை - கைப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன. மேலுலகத்திலிருப்பவை சிறந்தனவாயிருக்கு மென்றகொள்கைபற்றி, இந்திரனுலகு தன்னிலு மென்தொழிற் கெதிரிலையென்கின்றான்: தன்னுடையாற்றலை யுணராரிடத்துத் தன்னைப் புகழ்தல் தக்கதே யாதலால், இங்ஙனம் புகழ்ந்து கூறினா னென்க. |