வீடுமன் முதலியபலர் அருச்சுனனொருவனை ஒருங்குசூழ்ந்து அவன்மேற்பற்பல அம்புதொடுத்துப் பொருதபோது அருச்சுனன்தான் சுழன்றுகொண்டேஎதிரம்புதொடுத்து அவர்களனைவருடைய அம்புகளையுந் தடுத்தனனென்பதாம். பவுரி - தன்னிலே தான் சுற்றுதல்; இது கூத்து விகற்பங்களிலொன்றுமாம். தான் ஒருவனாயிருந்துகொண்டே இங்ஙனம் பலருடன்ஒருங்குபோர்செய்யும் படியான பெருந்திறம் அருச்சுனனுக்குச் சிவபிரானருள்பெற்றதனால் அமைந்த தென்பது தோன்ற, இங்கு 'கவுரிபங்காளன்றன்னைக்கண்ணுறக்கண்ட காளை' என்றார். 'ஒன்றுந்தன்மேற்படாமல்வெம்பகழிகோத்தான்' என்றதனால், தானெய்த அம்புகளெல்லாம்அவர்கள்மேற்படும்படி தொடுத்தனனென்பது தோன்றுமாறு அறிக; இது,அருத்தாபத்தி: அவ்விவரம், அடுத்தகவியில் விளங்கும். 'இவர் தேர்'என்பதை வினைத்தொகையாகக்கொண்டு, ஏறுதற்குரிய தேர் என்று உரைப்பர்ஒருசாரார். இலக்கு-லக்ஷ்யம்: 'அது' என்றது, பகுதிப்பொருள்விகுதி. கவுரி - கௌரீஎன்ற வடசொல்லின் விகாரம்: அப்பெயர் - மஞ்சள்நிறமுடையவளென்றுபொருள்படும்; இயல்பிற் கருநிறமுடையளாயிருந்த அம்பிகை பின்புஒருசமயத்தில் தன்னைப் பரமசிவன் 'காளி!' என்றுவிளித்தமை குறித்துவருத்தங்கொண்டு அப்பெருமானைப் பிரார்த்தித்துக் கருநிறத்தைமாற்றிப்பொன்னிறம் பெற்றுக் கவுரியென்னும் பெயரையுடையளாயின ளென்ற வரலாறு,புராணப் பிரசித்தம். 'கவுரி பங்காளன்' என்றது- வலப்பாகம் சிவரூபமும் இடப்பாகம் பார்வதிரூபமுமான அர்த்தநாரீசுவரமூர்த்தியை யுணர்த்தும்; தனது வடிவத்தில் ஒருபங்கை அம்பிகைக்குக் கொடுத்துத் தான் ஒருபங்காயுள்ளவளென்க. இதன் விவரம்:-முன்னொருகாலத்துக் கைலாசகிரியிலே சிவபிரானும் உமாதேவியும் ஒரே ஆசனத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது, பிருங்கியென்னும் மகாமுனி பரமசிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ்செய்ய விரும்பி ஒரு வண்டுவடிவமெடுத்து அவ்வாசனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்துசென்று அம்பிகையைவிட்டுச் சிவபிரானை மாத்திரமே பிரதக்ஷிணஞ்செய்ய, அதுகண்ட பார்வதிதேவி தன்பதியை நோக்கி 'முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?' என்று வினவ, உருத்திரமூர்த்தி 'இம்மை மறுமைகளில் இஷ்ட சித்திபெற விரும்புபவர் உன்னையும், முத்திபெற விரும்புபவர் என்னையும் வழிபடுவர்; இது நூற்றுணிபு' என்றுசொல்ல, அதுகேட்ட தேவி 'இறைவனுருவத்தைப்பிரிந்து தனியேயிருத்தலினாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது' என்று இரங்கி, தான் சிவபிரானை விட்டுப்பிரியாதிருக்குமாறு கருதி, புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம்புரிந்து வரம்பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனக்கு இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றன ளென்பதாம். (258) |