பக்கம் எண் :

182பாரதம்விராட பருவம்

தேரில்-,ஏறி-ஏறிக்கொண்டு, விரைந்துபோய் - வேகமாகச்சென்று, வெவ்
வெயில் ஆறும் வண்ணம் - கொடிய வெய்யிலின் வெப்பத்தாலுண்டான
தாபம்தணியும்படி, விராடன் முதுஊர் அ எயில் சூழ்ந்த காவின் அமர்ந்தனன்
- விராடராஜனுடைய பழமையான நகரத்தினது அழகியமதிலின் புறத்திற்
சூழ்ந்துள்ள சோலையிற்சேர்ந்து தங்கினான்; (எ - று.)

      போர்முடிந்தவுடனே அருச்சுனனது தேர் அவனது கருத்தின்படி
மீண்டுசென்றுவிட, பேடிவேடங்கொண்ட அருச்சுனன் உத்தரனது தேரிலேறி
முன்போலத் தேர்செலுத்திக்கொண்டு வெயிற்பொழுதில் அதிவேகமாக
விராடநகரத்தை நோக்கிச் செல்லுகையில், வெயில் வெப்பத்தாலாகிய
இளைப்புத் தணியுமாறு அந்நகர்ப்புறச்சோலையிற் சிறிது பொழுது உத்தரனும்
தானுமாகத் தங்கின னென்பதாம்.  அக்கினிபகவான் கொடுத்த
நான்குவெள்ளைக்குதிரைகள் பூண்ட குரங்குக்கொடித்தேர் முன்பு அருச்சுனன்
கருதிய மாத்திரத்தில் வந்து சேர்ந்தமை கீழ்-58-ஆஞ் செய்யுளிற்
கூறப்பட்டதனால், போர்முடிந்தபின்பு.  அத்தெய்வத்தேர் முன்புதான் இருந்த
இடத்திற்கு மீண்டுச்செல்வதை இங்குக் கூறுகின்றார்.  பசும்பொன்னாலாகிய
ஆபரணங்களென்பார், 'பைம்பூண்' என்றார். 'மூதூர்' எனவே,
ஊர்பழையதாயினும் இப்படிப்பட்ட போரை யறிந்திராததென்பது கருத்து.  கா -
பாதுகாக்கப்படுவதென்று பொருள்படுங் காரணக்குறி.                 (268)

110.-அருச்சுனன் உத்தரனுக்குத் தமது வரலாறுகூறுதல்.

ஆறியபசுந்தண்காவி னசைவொரீஇயிருந்தவீரன்
ஏறியகானிற்பல்யாண் டிருந்தபினேனையாண்டு
மாறியவடிவத்தோடிவ் வளநகர்வைகினோமென்று
ஊறியவமுதச்சொல்லா லுத்தரற்குரைசெய்தானே.

      (இ -ள்.) ஆறிய - வெப்பமில்லாத, பசு - பசுமையான, தண்குளிர்ந்த,
காவின் - (அந்தச்) சோலையில், அசைவு ஒரீஇ இருந்த -
இளைப்பாறிக்கொண்டிருந்த, வீரன் - வீரனாகிய அருச்சுனன்,- உத்தரற்கு -
உத்தரனை நோக்கி ,- '(நாங்கள்), ஏறிய கானில் பல்யாண்டு இருந்தபின் -
சிறந்த காடுகளில் அநேகவருஷகாலம் [பன்னிரண்டுவருஷம்]
வசித்திருந்தபின்பு, ஏனை ஆண்டு - மற்ற ஒருவருஷகாலம், மாறிய
வடிவத்தோடு - (உண்மையுருவத்தை யொழித்து) வேறுபட்ட உருவத்துடனே, இ
வளம் நகர் வைகினோம் - வளப்பமுள்ள இந்தநகரத்தில் (அஜ்ஞாத)
வாசஞ்செய்தோம்,' என்று-, அமுதம்ஊறிய சொல்லால் உரைசெய்தான் -
அமிருதம்போன்ற இனிமைமிக்க வார்த்தைகளினாற் கூறினான்;

      ஏறியகான் - காமியவனம், துவைதவனம், முதலியன.  இதற்கு -
மரங்களுயர்ந்த காடென்று உரைப்பாருமுளர்.  'ஊறிய அமுதச் சொல்'
என்பதற்கு - (பாற்கடல்) சுரந்த அமிருதம்போன்ற சொல் என்றும் உரைப்பர்:
மகிழ்ச்சியை விளைத்தலால், 'ஊறிய அமுதச்