பக்கம் எண் :

208பாரதம்விராட பருவம்

தகவுடைய பாண்டவரும் வண்ண மாதுந்தனித்தெண்ணிப்
                              பரகாய சரிதர் போலப்,
புகலரிய பழையதமவடிவங் கொண்டார் போனபக லவனுதயப்
                              பொருப்பின் மீண்டான்.

      (இ -ள்.) இவை - இவ்வார்த்தைகளை, மகன் - (தன்) புதல்வனான
உத்தரன், உரைத்த அளவில் - சொல்லியவளவிலே, தாதை கேட்டு - அந்த
உத்தரனது தந்தையாகிய விராடராசன்கேட்டு, மனம் நடுங்கி-, நெகிழ்ச்சியுடன்
- மனத்தளர்ச்சியுடனே, மகிழ்ச்சி கூர்ந்தான் - சந்தோஷம் மிகப்பெற்றான்:
பகல் அமரில் - பகற்பொழுதைய போரிலே, ஏறிய மெய் பராகம் -
தன்னுடம்பிற் படிந்த புழுதி, மாற - போகும்படி, பகலோன்உம் - சூரியனும்,
புனல் படிவான் - நீராடுதற்கு, பரவை சேர்ந்தான் - (மேல்திசைக்) கடலை
யடைந்தான் [அஸ்தமித்தான்]; (அவ்விராத்திரியில்), தகவு உடைய
பாண்டவர்உம் - பெருமையையுடைய பாண்டுபுத்திரரைந்துபேரும், வண்ணம்
மாது உம் - வண்ணமகளாகிய திரௌபதியும், தனித்து எண்ணி - தனியாக
இருந்து இரகசியமாக ஆலோசித்து, பர காய சரிதர் போல - பரகாயப்
பிரவேசஞ் செய்தவர்கள்போல, புகல் அரிய பழைய தம் வடிவம் கொண்டார் -
வருணித்துச்சொல்லுதற்கு அருமையாகவுள்ள பழமையான தங்களது
நிசரூபத்தை யடைந்தார்கள்; போன பகலவன் - அஸ்தமித்த சூரியன், உதயம்
பொருப்பில் மீண்டான் - திரும்பி உதயகிரியில் வந்தான் [உதித்தான்]; (எ -
று.)-மற்று - அசை.

      மிகச்சிறந்தவர்களாகிய பாண்டவர்களையும் திரௌபதியையும் தன் கீழ்
அடங்கிய பரிவாரங்களாகக் கொண்டிருந்ததையும், தருமபுத்திரனைக்
கவறுகொண்டு அடித்ததையுங் கருதி விராடன் மன நடுங்கினன். உரைத்தளவு
- தொகுத்தல்.  நெகிழ்ச்சியும் - மனநடுக்கத்தாலானதே.  மகிழ்ச்சி -
பாண்டவர் தன்னிடத்து வாழுமாறு தான் பாக்கியஞ்செய்திருந்ததைக்
கருதியதனாலாகியது. மாலைப்பொழுதில் விளங்குகின்ற சூரியனது இயற்கைச்
சிவப்பைப் பகற்பொழுதிற் போர்க்களத்தினின்று எழுந்த புழுதி
படிந்ததனாலாகியதாகவும், இயல்பில் அஸ்தமிப்பதை அப்புழுதி நீங்க
மேல்கடலிற் குளிப்பதற்குச்சென்றதாகவும் வருணித்தவாறாம்;
தற்குறிப்பேற்றவணி. பரகாயசரிதர் - தமது உடம்பை விட்டு
வேறோருடம்பிற்புகுந்திருந்து மீண்டும் தமது உடம்பில் வருபவர்; இது,
ஒருவகை யோகசித்தி: கூடுவிட்டுக் கூடுபாய்தலெனப்படும்.           (300)

நிரைமீட்சிச் சருக்கம் முற்றிற்று.

-----