ஐந்தாவது
வெளிப்பாட்டுச்சருக்கம்.
(பாண்டவர் அஜ்ஞாதவாசத்தினின்று) வெளிப்பட்டதைக்
கூறுஞ்சருக்கமென்பது பொருள். வெளிப்பாடு - வெளிப்படுதல்: முதனிலை
திரிந்த தொழிற்பெயர்.
பாண்டவர் நிஜவடிவத்துடன் வெளிப்பட்டதும், அவர்
தன்னிடத்திலிருந்ததை யுணர்ந்த விராடன் சிந்தனைகொண்டு உத்தரனுடன்
அப்பாண்டவரைப்பணிந்து பணிவுரைகூறியதும், உத்தரன் தன்தங்கை
உத்தரையை அருச்சுனனுக்கு உரியாளென்ன அருச்சுனன் உத்தரையை
மருமகளாகக் கொள்ளுவதாகக் கூறியதும், பாண்டவர் தமர்நண்பர்க்குத்
தம்வெளிப்பாட்டைத் தூதர்முகமாகத் தெரிவித்ததும், க்ருஷ்ணன் முதலியோர்
வந்ததும், க்ருஷ்ணன் சிவேதன்வரலாற்றைச் சொல்ல அந்தச்சிவேதன்
தந்தையான விராடனடிபணிந்து அத்தந்தையின் மனமுவப்ப விருந்ததும்,
பாஞ்சாலர் முதலியோர் தானையுடன் வந்ததும், அன்னார் மனநோவுதீரத் தாம்
விராடநகரத்து இனிதிருந்தமையைத் தருமன் தெரிவித்ததும், வந்த மன்னரிடம்
தருமன் துரியோதனனுடைய செய்தியெல்லாம் நயமாகச்சொல்லிக்
கொண்டிருந்தபோது சல்லியன்வந்து தான் துரியோதனன்
வஞ்சகத்துக்குட்பட்டுச் செஞ்சோற்றுக்கடனுக்காக அவனுக்கே துணையாவது
சொல்லிச் சென்றதும், அபிமந்யுவுக்கும் உத்தரைக்கும் விவாகம்நடந்ததும், தாம்
முன்னர் வன்னிமரத்துப் படைக்கலங்கள் சேமித்துவைத்திருந்தவற்றைப்
பாண்டவர் மீண்டு கொண்டதும், பின்னர் உபலாவியநகரிற் புகுந்து போருக்கு
ஆராய்தலுறுதலும் இதிற் கூறப்படுகின்றன.
1.-கடவுள்வணக்கம்.
எக்கடலு மெக்கிரியு மெவ்வுலகுமுலகில் தக்கபல யோனிகள் சராசரமனைத்தும் மிக்கவிதி யால்விதிசெய்விதியினை விதிக்குஞ் செக்கமல நாபிமுகில் சேவடிதுதிப்பாம். |
(இ -ள்.) எ கடல்உம் - எல்லாக் கடல்களையும், எ கிரிஉம் - எல்லா
மலைகளையும், எ உலகுஉம் -எல்லாவுலகங்களையும், உலகில் தக்க பல
யோனிகள் சராசரம் அனைத்துஉம் - உலகிலே வாழ்கின்ற
பலபிறவிகளைச்சேர்ந்த இயங்குதிணை நிலைத்திணையென்ற
பொருள்கள்யாவற்றையும், மிக்க விதியால் - மேம்பட்ட வலிமைகொண்ட
(அவ்வவ்வுயிர்களின்) விதியின்படி, விதி செய் - சிருஷ்டித்தொழிலைச்
செய்கின்ற, விதியினை - பிரமதேவனையும், விதிக்கும் - சிருஷ்டிக்க வல்ல,
செக் கமலம் நாபி - செந்தாமரை யுந்தியையுடைய, முகில் - மேகம்போன்ற
திருநிறத்தவனான திருமாலின், சே அடி - செவ்விய திருவடிகளை,
துதிப்பாம்-; (எ - று.)