கிரி ஒன்றுஏந்து கோவலன் போய் உரைத்தாலும் - முன்னொரு காலத்திலே மிகுதியாகப் பெய்த மழையைத் தடுப்பதற்கு (க் கோவர்த்தனமென்னும்) மலையொன்றை (க் குடையாக) எடுத்தருளிய கண்ணபிரான் தூதுபோய்ச் சொன்னாலும், அவன் - அத்துரியோதனன், குருநாடும் அரசும் கொடுக்க மாட்டான் - குருநாட்டின் பாகத்தையும் (அதற்கு உரிய) அரசாட்சியையும் (நமக்குக்) கொடுக்கமாட்டான்; (ஆதலால்), - அம் நாவல் பூதலத்து அரசர் - அழகிய ஜம்பூத்துவீபத்திலுள்ள அரசர்களெல்லோரும், நாடு இரந்தோம் என நம்மை நகையாவண்ணம் - இராச்சியத்தை (ப் பகைவனிடம்) யாசித்தோமென்று (நம்மை இகழ்ந்து) சிரித்துப் பரிகாசஞ்செய்யாதபடி, காவலன் தன் படைவலியும் - அரசனான துரியோதனனது சேனாபலத்தையும், எனது தட புயம் வலியும் - (தம்பியாகிய) என்னுடைய பெரிய தோள்களின் வலிமையையும், காணல் ஆமே - (விரைவில் எது சிறந்ததென்று பிரதியட்சமாகப்) பார்த்திடலாமே; (எ - று.) துரியோதனனை வேரோடு அழித்துவிடுதல் என்னொருவனாலேயே செய்யக்கூடிய சிறிய தொழிலாயிருக்க, வலியற்றவர்போல எளிமை தோன்ற வீணாகச் சமாதானம் பேசுதல் சிறிதுந் தகுதியன்றென்று கூறினனென்க. நகுலன் இவ்வகைப் பெருந்திறலுடையனாதலை, "நகுலன் பரியேறினாலொன்று மூன்று, புவனங்களேழும் புடைபோய்-இகலும், அவனுடைய வில்லு மதிரதரு மெல்லாம், இவனுடைய முன்னில்லா ரீங்கு" என்று (பாரதவெண்பாவிற்) கண்ணன் கூறியதனாலும் உணர்க. 'எமது தடம்புய வலியும்' என்ற பாடத்திற்கு - (வீமன் முதலிய) எங்களுடைய பெரியதோள் வலிமையு மென்க. அடைக்கலமடைந்தவர்களை ஆதரிக்கிற கண்ணபிரானது உயர்வு தோன்ற, 'முதற் கிளர்மழைக்குக் கிரியொன்றேந்து கோவலன்' என்றான். முதல் - இளமையிலே என்றபடி. 'முகில்கிளர் மழைக்கு' என்றும்பாடமுண்டு. மழைக்குக் கிரியேந்திய கதை:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச் சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை யேவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகட்கும் பசுக்கட்கும், கண்ணனுக்கு இஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையை எடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பதாம். 'தீர்வரிய' எனப் பாடமோதி, தீர்வு அரியபகை - நீங்குதலில்லாத விரோதம், கேவலம் - மிகுதியான, முதல் - இளமைதொடங்கி, |