எலாம் - நீசொன்ன கருத்துக்களையெல்லாம், இயல்புடன் - (தூதுசெல்வோர்க்குரிய) முறைமையோடு, இனிது ஆக - இனிமையுடையதாம்படி, அந்த அந்தனோடு - பிறவிக்குருடனாகிய அத்திருதராட்டிரனுடன், உரைத்தபின் - (சென்று) சொன்ன பின்பு, அவன் - அத்திருதராட்டிரன், நினது - உன்னுடைய, அவனி - இராச்சியத்தை, தந்திலன் ஆகில் - கொடுத்திடானானால், முந்த - முன்னதாக [உடனே என்றபடி], திருமுகம் - பத்திரிகையை, வரவிடுக - (எங்களுக்கு) வந்துசேரும்படி அனுப்புவாயாக, என்று - என்று சொல்லி, வந்த அந்த மன்னவர்களும் - (அஜ்ஞாதவாசங்கழிந்த செய்தியறிந்து பாண்டவர்களைப் பார்த்தற்கு) வந்த அவ்வரசர்களெல்லோரும் தம்தம் மாநகர் அடைந்தனர் - தங்கள் தங்களுக்கு உரிய பெரியபட்டணத்தைச் சேர்ந்தார்கள்; (எ - று.)-மன், ஓ - ஈற்றசைகள். அந்தணன்- அம் தண் அன் எனப்பிரித்து, அழகிய தண்மையை [அதாவது - அருளை] உடையவனென்றும்; அந்த அணவு அன் எனப்பிரித்து, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பவனென்றும் பொருள் கொள்ளலாம். இது - காரணங்கருதியவழி அருளையும் வேதாந்த ஞானத்தையுமுடைய பிறசாதியார்க்கும் பெயராகத்தக்கதாயினும், அங்ஙனமின்றி, இடுகுறியளவாய் வேதியர்க்கே பெயராக வழங்குதலால், காரணவிடுகுறிப்பெயர்; இங்கே 'நீ இசைத்தனவெல்லாம்' என்றதனால், கீழ்த்தருமன் தன் கருத்தை விளக்கிச் சில வார்த்தைகளை எல்லாவரசர்கள் முன்னும் வெளிப்படையாகக் கூறினானென அறிக; இது - கீழ்கண்ணன் வார்த்தையில் 'வில்லினாலமர் மலைந்து கொள்ளுது மெனல்,' 'இவர் மனம்' என்றவற்றாலும் பெறப்படும். இயல்பு என்றது, நூல்களிற் கூறப்பட்ட தூதவிலக்கணவமைதியை. "தூவாதநீக்கி நகச்சொல்லி, நன்றி பயப்பதாந் தூது" என்றபடி தான் வேற்றரசர்க்கு இன்னாத காரியங்களைச் சொல்லும்பொழுது வெய்ய சொற்களைநீக்கி இனிய சொற்களால் மன மகிழச்சொல்லிக் காரியத்தைத் தவறாமல்முடித்துத் தன் அரசனுக்கு நன்மைபயப்பது நல்ல தூதனது முறைமையாதலால், 'இனிதாகவுரைத்தபின்' என்றார். அந்தன் என்ற சொல்புறமாகிய ஊனக்கண் இல்லை யென்ற மாத்திரத்தை யுணர்த்துவதோடு, அகமாகிய ஞானக்கண்ணுமில்லை யென்ற கருத்தையுங் குறிப்பதாகக்கொள்ளலாம்; கீழ்க் கவியில் 'கண்ணிலாவரசன்' என்றதிலு மிது. அவநி - பூமி; (அரசர்களாற்) காத்தற்குரியதென்ற பொருள்பற்றிய காரணப்பெயர்; அவநம் - காத்தல். முந்த வரவிடுகென இயையும். தனது வெற்றிக்கு அடையாளமாகவும் மங்களகரமாகவும் முரசத்தின்வடிவத்தைத் தருமன் கொடியிற்கொண்டான்போலும். திருமுகம் என்ற சொல்லுக்கு - அழகிய முகமென்று பொருள்; இப்பெயரால் ஓலையைக் கூறுவது, மங்கலவழக்கென்பர்; வடமொழியில் 'ஸ்ரீமுகம்' என்று வழங்கும். வந்த வந்த எனவே கொண்டு அடுக்கை - மிகுதி பற்றிய தென்னலாம். வந்த வந்த மன்னவர்கள் என்றது, கீழ் வெளிப்பாட்டுச் சருக்கத்தில் "பாஞ்சாலர் போசகுலமன்னவர் பாண்டிவேந்தர், வாஞ்சாமனத்தின் வயமத்திரர் மாகதேயர், பூஞ்சாபவெற்றிக்கொடிக்கேரளர் பொன்னிநாடர், |