அப்பொழுதுசூரியசந்திரர் பார்த்து, 'இதென்ன காரணம்?' என்று தமக்குள் ஆலோசித்துக் கண்ணபிரானை ஒருங்கே வந்தடைந்து 'இன்றைக்கு எப்படி அமாவாசை?' என்று வினவ, அவ் வெம்பெருமான் 'அமாவாசை யென்பது, நீங்களிரண்டுபேருங் கூடுந் தினமன்றோ? நீவிர் இருவரும் இப்பொழுது கூடிவந்த இத்தினத்தை அமாவாசையென்று சொல்லத் தடையென்ன?' என்று விடைகூற, அவர்கள் உவந்துசென்றன ரென்க. பன்னான்கு - பதினான்கு என்பதன் மரூஉ. உவா - பதினைந்தாந்திதி. இங்கு இடத்திற்கு ஏற்ப அமாவாசை யாயிற்று. பஞ்சைக்கொண்டு நூல் நூற்கப்படுதல்போல சொற்களைக்கொண்டு அமைக்கப்படுதலாலும், மரம் முதலியவற்றின் கோணலைப் போக்கும் ஏற்று நூல்போல மனிதர்களது மனத்தின் கோணலைப் போக்குதலாலும், நூல் என்றது உவமவாகுபெயராம்; "பஞ்சிதன் சொல்லாப் பனுவலிழையாகச், செஞ்சொற்புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவாயாகக் கதிரே மதியாக, மையிலா நூன் முடியுமாறு", "உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப், புரத்தின் வளமுருக்கிப் பொல்லா -மரத்தின், கனக்கோட்டந் தீர்க்குநூலஃதேபோன மாந்தர், மனக்கோட்டந்தீர்க்குநூன் மாண்பு" என்றார், நன்னூலார்; 'இனி நூலென்றசொற்குப்பொருளுரைக்கப்படும்; - நூல்போறலின் நூலென்ப; பாவைபோல்வாளைப்பாவையென்றதுபோல. நூல்போறலென்பது - நுண்ணிய பலவாய பஞ்சின்நுனிகளாற் கைவல்மகடூஉத்தனது செயற்கைநலந் தோன்ற ஓரிழைப் படுத்தலாம்,உலகத்து நூல்நூற்ற லென்பது; அவ்வாறே சுகிர்ந்துபரந்த சொற்பாவைகளாற்பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியின் பிண்டம் படலம் ஓத்துச்சூத்திரமென்னும் யாப்பு நடைபடக் கோத்தலாயிற்று, நூல்செய்தலாவது:அவ்வகை நூற்கப்படுதலின், நூலெனப்பட்டது. இனி, ஒருசாரார், நூல்போலச்செப்பஞ் செய்தலின் நூலென்ப. இனி, தந்திர மென்னும் வடமொழிப்பொருளைநூலென வழங்குதல் தமிழ்வழக்கெனக் கொள்க. இது, 'நூலென்றசொற்குப்பொருள்' என்ற இறையனாரகப் பொருளுரைநடையையும் இங்கே அறிக. தொடுத்த நூல் முனிவர் என்பதற்கு - தரித்தமுப்புரிநூலையுடையமுனிவரென்றும் பொருள்கொள்ளலாம்; "நூலே கரகம் முக்கோல் மணையே,ஆயுங்காலை யந்தணர்க்குரிய" என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார். முநி -(கடவுளைத்) தியானஞ் செய்பவனென்றும், (முக்காலத்து) ஞானமுடையவனென்றும் பொருள்; இனி, (எல்லாப் பற்றுக்களையும்) முனிந்தவன்[வெறுத்துவிட்டவன்] ஆதலால், முனியென்று காரணப்பொருள் கூறி இதுதென்மொழியென்று சாதிப்பர் ஒரு சாரார். சுடர் - ஒளி; அதனையுடையசூரியசந்திரர்க்கு ஆகுபெயர்.
"நீதியா நின்ற பதினாலா நாள் தன்னை, யாதி யமாவாசை யாக்கலாஞ்- சோதிமதி, யாதித்தனோடே யமர்ந்திருக்கும் வேதியராற், சாதித்துக் கொள்வதுகாண் சார்வு" என்று திருவுள்ளம்பற்றி, கண்ணபிரான் பன்னீராயிரம் பிராமணர்க்கு மகாதானங்கற்பித்து |