பக்கம் எண் :

76பாரதம்உத்தியோக பருவம்

முன்னர் உலூகனைத் தூதனுப்பியதன்மேலும்இப்பொழுது கண்ணனையும்
தூதனுப்பக்கருதினன் என்க.  சாமம் முதலிய முதல் மூன்று உபாயங்களாற்
பகைவரை வழிப்படுத்தி அடக்க முடியாத பொழுதே இறுதியுபாயமான
தண்டத்தை உபயோகிக்கவேண்டுமென்பது, அரசநீதி.

    சஞ்சயன் என்ற பெயர் - (ஐம்புலன்களை) நன்றாக வென்றவனென்று
காரணப் பொருள்படும். (இவன் கவல்கணனது குமாரனாதலால்,
காவல்கணியென்றும் ஒரு பெயர் பெறுவன்.) இவன் - திருதராஷ்டிரனுக்கு
மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச் சில சமயங்களில்
தேர்செலுத்துதலுமுண்டு.  ஞானம் - ஞானத்தைவிளைக்குஞ் சொற்களுக்குக்
காரியவாகுபெயர்.  அன்பொடு என்றதனால், சஞ்சயன் துஷ்டரான
துரியோதனாதியரிடத்திலன்றிச் சாதுக்களான பாண்டவரிடத்து
மெய்யன்புடையானென விளங்கும்.  அன்பொடு என்பதில்,
உடனிகழ்ச்சிப்பொருளுக்கு உரிய 'ஒடு' என்னும் மூன்றனுருபு - அடைமொழிப்
பொருளது; அன்புடையவனாய் என்றபடி.  இனிது - இம்மை மறுமைகட்கு
இனிமையைத் தருவனவாக என்றவாறு.  அகன்றதன்பின், குரு நாடன், நோக்கி,
எண்ணி, இயம்புவான் என அந்வயங் காண்க.  சாமம் - இன்சொற்சொல்லல்.
பேதம் - மென்மையாலும் வன்மையாலும் பகைவர் மனத்தை வேறுபடுத்தல்.
தானம் - பகைவர் மனமகிழும்படி கொடுத்தல், தண்டம் - பகைவரைப்
போர்செய்து அழித்தே விடுதல்.  அஃறிணை உம்மைத்தொகைக்குப்
பன்மையீற்றாலே முடியவேண்டுமென்கிற நியதி இல்லாமையால் சாமபேததான
தண்டங்க ளெனப்படவில்லை.

     சுனை -ஊற்றுள்ள மலையின் நீர்நிலை.  தேன் இறைக்கும் எனப்பதம்
பிரித்து, அழகிய குளிர்ந்த மலைகளிலே தினைப்புனத்துச்
சுனைகளிலெல்லாவற்றினின்றும் மிக்க தேனை நீராக இறைக்கப் பெற்ற என்றும்
உரைக்கலாம்.  தேனிறைக்கும் நாடு - பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.
நாட்டிற்கு அழகாவது - அளவிறந்த பொருளுடைமையால் பிறநாட்டவராலும்
விரும்பப்படுதல்.  இனி எழில் - நிலவளம் நீர்வளம் முதலிய வளங்களுமாம்.
குருநாடு - சந்திர குலத்துக் குரு வென்னும் அரசனால் சீர்திருத்தியாளப்பட்ட
நாடு.  பதின்மூன்று வருஷ காலமாக நாட்டையிழந்துள்ள தருமனை இங்கே
'குருநாடன்' என்றது, முன்னே அரசாண்ட பாண்டுவின் முதற்குமாரனும்
துரியோதனாதியரினும் பிராயத்தில் மூத்தவனும் அவர்களை அழித்தற்கு ஏற்ற
ஆற்றலுடையவனுமாகிய இந்த யுதிட்டிரனே அந்நாட்டிற்கு உரியவனென்ற
தகுதிபற்றியும், முன்பு அரசாண்டதுபற்றியும், இனி விரைவில் ஆள்வது பற்றியும்
என்க.  'சுனைகள் தோறும் ஏனலந்தண்கிரிப் பெருந்தேனிறைக்கு மெழிற்
குருநாடு' என நாட்டின் சிறப்புக்கூறவே, அத்தன்மையதான நாட்டை விட்டுக்
காட்டுக்குச் செல்ல எவர்க்கும் மனமுண்டாகாதென்பது குறிப்பிக்கப்பட்டது.
தரும முறைமை - தருமசாஸ்திரமுமாம்; முறைமை - காரியவாகுபெயர். (62)