இளையோன் - (அவனுக்கு) அடுத்த தம்பியானவீமன்,- வெம் சினம் மனத்தில் மூளமூள - கொடிய கோபம் மனத்திலே அதிகமாக மேன் மேல் உண்டாகிவளர, நா தோம் இல் உரை பதற - நாக்கிலிருந்து வருகிற குற்றமற்ற சொற்கள் குளற, கதும்என எழுந்து இறைஞ்சி உற்று - விரைவாக எழுந்து (கண்ணபிரானை) வணங்கி நின்று, (அக்கண்ணனைநோக்கி),- 'ஞாலம் எல்லாம் பூத்தோனே - உலகங்களெல்லாம் நாபித்தாமரைமலரினின்று உண்டாகப்பெற்றவனே! பூ தவிசில் பூவை புணர் மணிமார்பா - (எல்லாமலருள்ளுஞ் சிறந்த) செந்தாமரைமலராகிய ஆசனத்தில் வீற்றிருக்கின்ற கிளிகொஞ்சுவது போன்ற இன்சொற்களையுடையவளான திருமகள் வீற்றிருக்கப் பெற்ற (கௌத்துபமென்னுந்) தெய்வ விரத்தினத்தையு மணிந்த திருமார்பையுடையவனே! புன்மையாவும் தீர்த்தோனே - (அன்பர்களது) குறைகளையெல்லாம் நீக்கியருளியவனே! ஊனம் இலான் - குற்றமில்லாதவனான இத்தருமபுத்திரன், மானம் இலாது உரைப்பதற்கு - மானமில்லாமல் (இங்ஙனம்) பேசுவதற்கு, என்செய்வது - (யாம்) செய்வது யாது?' என்றான் - என்று சொன்னான்; (எ - று.) - மற்று - அசையுமாம். மூத்தோன், மூ - வினைப்பகுதி;மூத்தல் - பிராயம் முதிர்தல். இளையோன் என்ற சொல்லில், போர்க்கு இளைக்காதவன் என்ற பொருளும் தொனிக்கும். மூளமூள - அடுக்கு, மிகுதிப்பொருளது. தோம் - தோஷம் என்னும் வடமொழியின் சிதைவு என்பர். உரை பதறுதற்குக் காரணம் கோபாவேசம். கதுமென - விரைவுக்குறிப்பு; இடைச்சொல். முதலடியில் முரண்தொடையும், நான்காமடியில் பிராசமுங் காண்க. "பந்திக்கமலத்தடஞ்சூழரங்கர்படைப்பழிப்புச் சிந்தித்திடுவதுமில்லை கண்டீர் அத்திசைமுகனோடு, உந்திக் கமலம் விரிந்தால் விரியும் உகக்கடையில், முந்திக்குவியி லுடனேகுவியு மிம்மூ தண்டமே' என்றபடி, திருமாலின் உந்திக்கமலமலர் மலர்ந்தமாத்திரத்தில் படைத்தற்கடவுளான பிரமனுடன் அண்டங்களும் அதனிலிருந்து உண்டாகின்றன வென்பது நூற்கொள்கை யாதலால், 'ஞாலமெல்லாம் பூத்தோனே' என்றான். சினையாகிய நாபித்தாமரையின் வினையாகிய பூத்தலை, முதலாகிய கடவுளின்மேல் ஏற்றிச் சொன்னது உபசார வழக்கு. பூவை - கிளி; அதுபோன்ற இன்சொலுடையவளுக்கு உவமையாகுபெயர்; இனி, பூவை - நாகண வாய்ப்பறவையுமாம்; அதுவும் இன்சொல்லில் உவமம். திருமால் திருமகளை வலத்திருமார்பிலும், கௌஸ்துபமணியை இடத்திருமார்பிலும் கொண்டுள்ளான். இனி, மணி மார்பு - அழகிய மார்பு என்றுமாம்; இரத்தின ஆரமணிந்த மார்புமாம். புணர் மார்பு - முக்காலமுங் கருதும் வினைத்தொகை. புன்மை - சிறுமை. வீமனைக்கழுவேற்றுதல், திரௌபதியைத் துகிலுரிதல், துர்வாசமுனிசாபம் முதலிய பல சங்கட காலங்களில் கண்ணன் தங்களைப் பாதுகாத்தருளியமை பற்றி, 'புன்மையாவுந் தீர்த்தோனே' என்று அப்பெருமானை விளித்தானுமாம். கொல் |