இந்நூலுக்குப் பாரதமென்னும்பெயர் இடப்பட்டதென்றுங் கொள்ளலாம். இருக்கு முதலிய நான்குவேதங்களோடு ஒப்ப ஐந்தாம் வேதமென்று சிறப்பித்துக் கூறப்படுவதும், மிகச்சிறந்த பகவத்கீதையைத் தன்னுள் பீஷ்மபர்வத்திலும் விஷ்ணுஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தை ஆநுசாஸநிகபர்வத்திலும் அடக்கிக்கொண்டிருப்பதும், இந்நூலுக்கு எல்லா நூல்களினுஞ் சிறந்த மேம்பாடாம். இந்நூலை முதலில் வடமொழியிற்செய்தவர், ஸ்ரீவேதவியாசமகாமுனிவர்; இவரால் வைக்கப்பட்ட 'பாரதம்' என்கிற முதனூலின் பெயரே வழிநூலாகிய இத்தமிழ்நூலுக்கும் பெயராயிற்று. பாரதத்துக்கு 'ஜயம்' என்றும் ஒரு பெயருண்டு. இது, இதிகாசம் இரண்டனுள் ஒன்று, மற்றொன்று - இராமாயணம். உபதேசபரம்பரையில் வந்த ஒருவருடைய பழைய சரித்திரமொன்றைப் பிரதானமாக எடுத்துப் பலகிளைக்கதைகளோடு புணர்த்து விரித்துக் கூறும்நூல் இதிகாச மென்றும் [இதிகாசம் - பழையவரலாறு]. உலகத்தின் தோற்றம் ஒடுக்கம் முனிவர்கள் அரசர்கள்மரபு அவர்களுடைய சரித்திரங்கள் மநுவந்தரம் என்னும் ஐந்துவிஷயங்களை விரவிக் கூறும் நூல்-புராணமென்றும் [புராணம் - ஐந்து இலக்கணங்களுடன் பழையவரலாறுகளை யுணர்த்தும் நூல்] வேறுபாடு உணரத்தக்கது. புராணம் - பிராம்மம்முதலாகப் பதினெட்டுவகைப்படும். இந்த இதிகாசபுராணங்கள், வேதத்தின்கருத்து இன்னதென்று நியாயப்பிரமாணங்களால் தேற்றிவிளக்குதல்பற்றி வேதத்திற்கு உபப்பிரஹ்மணங்களென்று சொல்லப்படும்: உபப்பிரஹ்மணமென்றால் வளர்ப்பதென்று பொருள். இவற்றுள், புராணங்களினும் இதிகாசம் பிரபலமான பிரமாணமென்றும், அதுபற்றியே இதனை 'இதிகாச புராணம்' என முன்னர் வைத்துக் கூறுவதென்றும் அறிக. இப்பாரதத்தில் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் வருவதை ஆங்காங்குக்காண்க. பாரதம் - அந்தந்தப்பாகத்தின் விஷயத்தைக் குறிக்குஞ் சொற்களால் ஆதிபருவம், சபாபருவம், ஆரணியபருவம், விராடபருவம், உத்தியோகபருவம், வீட்டுமபருவம், துரோணபருவம், கன்னபருவம், சல்லியபருவம், சௌப்திகபருவம், ஸ்திரீபருவம், சாந்திபருவம், ஆநுசாஸநிகபருவம், அசுவமேதபருவம், ஆசிரமவாசபருவம், மௌசலபருவம், மகாபிரத்தானபருவம், சுவர்க்காரோகணபருவம் எனப் பெயர்பெற்ற பதினெட்டுப்பருவங்கள் அடங்கியுள்ளது. அவற்றுள், ஆறாவது வீ ட் டு ம ப ரு வ ம் . பீஷ்மபர்வம் என்ற வடசொற்றொடர் திரிந்தது. பீஷ்மனது சம்பந்தமான பருவ மென்று ஆறாம்வேற்றுமைத்தொகையாகக் கொள்க; விஷயமாகவுடைமை, வேற்றுமைப்பொருளாகிய சம்பந் |