பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்7

வாயுதேவனால் பீமசேனனையும். தேவேந்திரனால் அருச்சுனனையும் பெற்றாள்.
[முன்பு கன்னிப்பருவத்துச் சூரியனாற் குந்தியினிடம் பிறந்தவன், கர்ணன்.]
அவளுடைய சக்களத்தியான மாத்திரி, குந்தியால் அம்மந்திரமுபதேசிக்கப் பெற்று
அசுவிநிதேவர்களால் நகுலன், சகதேவன் என்னும் இரட்டைப்பிள்ளைகளைப்
பெற்றாள். திருதராட்டிரனுக்குத் துரியோதனன் துச்சாசனன் முதலிய நூறு
பிள்ளைகளும், துச்சளை யென்னும் ஒரு பெண்ணும் காந்தாரியிடம் பிறந்தார்கள்.
[பஞ்சபாண்டவர்களுள் தருமனும் வீமனும் துரியோதனாதியர் நூற்றுவரினும்
மூத்தவரென்றும், அருச்சுனன் முதலிய மற்றைமூவரும் துரியோதனாதியர்க்கு
இளையவரென்றும் அறிக.] பாண்டு சிலகாலத்துக்குப்பின் இறந்து போனான்.
அப்பொழுது மாத்திரி சககமநஞ்செய்தாள். பின்பு பாண்டவருந் துரியோதினாதியரும்
கிருபாசாரியர் துரோணாசாரியரிடத்து வில் வித்தை கற்கும் போதே,
துரியோதனாதியர் பொறாமையினால் பாண்டவரிடத்து ஞாதிப்பகைகொண்டு
பலதீமைகள் செய்துவந்தார்கள். வருகையில் அரக்குமாளிகையிலிட்டுத்
தங்களையெரிக்கும்படி துரியோதனாதியர் செய்த யத்தனத்தைப் பாண்டவர்கள்
விதுரரால்தெரிந்து தப்பிப் பிராமண வேடம்பூண்டு திரிந்து, திரௌபதியின்
சுயம்வரத்துக்குச் சென்று, அங்குக் கட்டியிருந்த யந்திரத்தை அறுத்து அருச்சுனன்
திரௌபதியைக்கொண்டுவர, தாயார்சொற்படி அந்த ஒருத்தியை ஐவரும்
மணஞ்செய்து கொண்டு அஸ்தினபுரத்துக்கு வந்தார்கள். வந்தவுடனே
திருதராட்டிரன்இவர்களை இந்திரப்பிரஸ்தத்திலும், துரியோதனன் முதலியோரை
அஸ்திநபுரியிலும்இருந்து அரசாளும்படி இராச்சியத்தைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

     பின்பு தருமபுத்திரன் தனதுதம்பிமார் நால்வரைக்கொண்டு திக்குவிசயஞ்
செய்துராஜசூயயாகம்முடித்து வெகுமகிமையுடன் விளங்கினான். அது கண்டு
பொறாமைகொண்டு துரியோதனன் யுதிட்டிரனைத் தந்திரமாகத் தன்னிடம்
அழைப்பித்துத் தன் மாமனான சகுனியைக்கொண்டு அவனுடன் சூதாடுவித்து
அவனது செல்வம் முழுவதையும் பறித்துக்கொண்டு அவனையும் அவனது
தம்பிமாரையும் அவர்களதுமனைவியுயான பாஞ்சாலியையும் அடிமையாக்கி,
அவளைத் தீண்டகூடாத காலத்தில் துச்சாதனனைக் கொண்டு சபையிற்
பலாத்காரமாகக் கொண்டுவந்து துகிலுரியச் செய்தான். அப்பொழுது
ஸ்ரீகிருஷ்ணாநுக்கிரகத்தால் அவள் மேன்மேல் ஆடைவளரப்பெற்று மானங்
காத்துக்கொண்டாள். பின்பு அவளது கற்பின் பெருமைக்கு அஞ்சித் திருதராட்டிரன்
அவர்களை அடிமைத்தனத்தினின்றும் நீக்கிச் செல்வத்தையுங் கொடுத்தனுப்ப,
துரியோதனாதியர் அதனை மறுத்து அவற்றையெல்லாங் கவர்ந்துகொண்டு,
மறுசூதாடி அடிமை நீங்கின அவர்களைப் பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு
வருஷம் அஜ்ஞாத வாசமும் [அஜ்ஞாதவாசமாவது - ஒரு வருஷம்தம்மை
இன்னாரென்று அறியவொண்ணாதபடி நாட்டில் மறைந்துவசித்தல்] செய்துவந்தால்
அரசுபெறலாமென்று ஏற்பாடுசெய்து அனுப்பினார்கள்.